”இந்த பார்மேட்டில் இதுதான் எனது கடைசி 12 மாதங்கள்”- ஓய்வை குறித்து அறிவித்த டேவிட் வார்னர்

”இந்த பார்மேட்டில் இதுதான் எனது கடைசி 12 மாதங்கள்”- ஓய்வை குறித்து அறிவித்த டேவிட் வார்னர்
”இந்த பார்மேட்டில் இதுதான் எனது கடைசி 12 மாதங்கள்”- ஓய்வை குறித்து அறிவித்த டேவிட் வார்னர்

எதிர்வரும் ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த 2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு அதிக நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் ஆளாக ஓய்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் டேவிட் வார்னர்.

2022 டி20 உலகக்கோப்பை சொந்த மண்ணில் நடைபெற்ற போதும், அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியது ஆஸ்திரேலிய அணி. இந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி புதிய டி20 அணியை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. வெளியேற்றப்படும் வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் பெயரும் இருக்கிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த டேவிட் வார்னர் 11 சராசரியுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் டேவிட் வார்னர், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் ODI மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆவலுடன் இருப்பதாகவும், அடுத்த 12 மாதங்களில் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து விலக விரும்புவதாகவும் கூறினார்.

இதுகுறித்து பேசியிருக்கும் வார்னர், "எனது ஓய்வு பெறும் முடிவில் டெஸ்ட் கிரிக்கெட் தான் முதலாவதாக இருக்கும். ஏனென்றால் நான் எதிர்வரும் டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட ஆவலாக இருக்கிறேன். ஒயிட்-பால் விளையாட்டை நான் விரும்புகிறேன், அது எப்போதும் சிறப்பானது. அதனால் அடுத்த 12 மாதங்கள் தான் டெஸ்ட் பயணத்தில் எனது கடைசி பயணமாக இருக்கும் " என்று கூறினார்.

டி20 வடிவத்தில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த டேவிட் வார்னர், “ டி20 கிரிக்கெட்டை நான் விரும்புகிறேன். 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை நான் விளையாட விரும்புகிறேன். வயதாகிவிட்டது என்று கூறுபவர்கள் எல்லாம் கவனித்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வடிவத்தில் டேவிட் வார்னர் அபார சாதனை படைத்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்காக 96 போட்டிகளில் விளையாடி 46.52 சராசரியில் 7,817 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். மேலும் அவரது அதிகபட்ச ஸ்கோரான 335* என்பது மேத்யூ ஹெய்டனின் 380 ரன்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச தனிப்பட்ட ஆட்டமாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விரேந்தர் சேவாக்கை பின்பற்றிய டேவிட் வார்னர், தற்பொழுது டெஸ்ட் வடிவத்தில் இருந்து தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com