முகமது ஷமியின் மதம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பாக். வீரர்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மதம் குறித்து பேசி பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேனான சோயப் மாலிக் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சானியா மிர்ஸாவின் கணவரான சோயப் மாலிக், சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களைப் பொறுத்தவர இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியை மாலிக்கிடம் எழுப்பினார். அந்த கேள்விக்குப் பதிலளித்த மாலிக், இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமிதான் சிறந்த பந்துவீச்சாளர். அவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. அவர் பந்துவீச்சினை உன்னிப்பாக கவனித்தவன் என்ற முறையிலும், அதனை எதிர்கொண்டு விளையாடிய அனுபவம் உள்ளவன் என்ற முறையில் இதனை நான் கூறுகிறேன் என்று மாலிக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலிக்கின் இந்த பதிவினை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். பந்துவீச்சாளர் குறித்து பேசுகையில் மதம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லையே மாலிக் சார் என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.