”கெய்ல், கோலியைவிட காலத்துக்கும் சிறந்த வீரர் இவர்தானாம்” - De Villiers சொன்ன வீரர் யார்?

”கெய்ல், கோலியைவிட காலத்துக்கும் சிறந்த வீரர் இவர்தானாம்” - De Villiers சொன்ன வீரர் யார்?
”கெய்ல், கோலியைவிட காலத்துக்கும் சிறந்த வீரர் இவர்தானாம்” - De Villiers சொன்ன வீரர் யார்?

டி20 போட்டிகளில் எப்போதும் சிறப்பாக விளையாடுவது எந்த வீரர் என்ற கேள்விக்கு, தன்னுடன் விளையாடிய விராட் கோலி மற்றும் க்றிஸ் கெய்ல் பெயர்களை கூறாமல், இளம் வயது வீரர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார் தென்னாப்பிரிக்காவின் சிறந்த அதிரடி கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ்.

”சிறந்தவர்களில் ஒருவராக இல்லாமல், அவர் தனித்தே சிறந்த வீரராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார், தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி பேட்டரான டிவில்லியர்ஸ்.

தென்னாப்பிரிக்காவின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்ட ஏபிடிவில்லியர்ஸின், 360* பேட்டிங்கிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து மட்டுமில்லாமல், உலகம் முழுவதிலும் இருந்து அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் அதிகளவில் கொண்டாடப்படும் வெளிநாட்டு வீரர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராக டிவில்லியர்ஸ்தான் இருப்பார். அந்தளவிற்கு டிவில்லியர்ஸின் 360 டிகிரி ஆட்டத்தின் மேல் அதீத விருப்பம் கொண்டவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

ஒருநாள் உலக கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் 16 பந்துகளில், அதிவேக சதம் 31 பந்துகளில், அதிகவேக 150 ரன்கள் 64 பந்துகளில் என அடுத்தடுத்து 3 சாதனைகளை தன் பெயரில் வைத்திருக்கும் ஏபி டிவில்லியர்ஸ், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ஒருநாள் போட்டிகளிலிருந்தும், 2021ம் ஆண்டு அனைத்து டி20 தொடர்கள், சர்வதேச போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வை அறிவித்திருந்தாலும் தற்போது வரை டி20 வடிவத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக டிவில்லியர்ஸ்தான் கருதப்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டை அதிகளவில் விரும்பக்கூடிய போட்டியாக மாற்றியதில் முக்கிய பங்கு நிச்சயம் டிவில்லியர்ஸிக்கும் சேரும்.

இந்நிலையில் சிறந்த அதிரடி பேட்டராக இருந்து ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸிடம், எப்போதைக்குமான சிறந்த டி20 வீரர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஒரு தனியார் தளம் நடத்திய பேட்டியொன்றில் அதற்கு பதிலளித்திருக்கும் அவர், பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டு விதத்தையும் எடுத்துகொண்டால், இரண்டிலும் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தான் அணியின், 24 வயது இளம் வீரரான ரஷித் கான் தான் என தன்னுடைய தேர்வை கூறியுள்ளார்.

சிறந்த டி20 வீரர் குறித்து பேசியிருக்கும் அவர், “ எல்லா காலத்திலும் என்னுடைய சிறந்த டி20 வீரர் என்றால் அதுவேறு யாருமில்லை, ரஷித் கான் தான். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இரண்டு துறைகளிலும் மேட்ச் வின்னராக இருந்து வரும் அவர், ஒரு சிங்கத்தின் திடமான மனதுடன் களத்தில் எப்போதும் உயிர்ப்புடன் போட்டியிடுகிறார்.

எல்லா போட்டியிலும் வெற்றியையே பெறவேண்டும் என எதிர்நோக்கும் ரசித், சிறந்த டி20 வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சிறந்தவர்களில் ஒருவர் என்று கூட சொல்லமுடியாது, அவர் தனித்தே சிறந்த வீரராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார் டிவில்லியர்ஸ்.

2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முதலாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அறிமுகமான ரஷித், அந்த ஐபிஎல் தொடரில் தன் அற்புதமான திறமையை வெளிக்கொணர்ந்து, 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி பெரியளவில் அசர செய்திருந்தார். கூர்மையான மற்றும் வேகமான கூக்ளி, லெக் ஸ்பின்களில் அசத்திய ரஷித், 2017 முதல் 2021 வரை ஐதராபாத் அணிக்காக விளையாடி 93 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ரஷித், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரராக, 77 ஆட்டங்களில் 126 விக்கெட்டுகளுடன் இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com