“அனில் கும்ப்ளே இல்லாத நேரத்தில்..” - ஹர்பஜனை நினைத்து நெகிழ்ந்த கங்குலி
“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அன்று ஹர்பஜனின் பந்துவீச்சை பார்த்து திகைத்துப்போனேன்” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். இந்தப் பேட்டியில் அவர் தனது கிரிக்கெட் வாழ்வின் பல சம்பவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது ஹர்பஜன் சிங் குறித்து பேசிய அவர், 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் நடந்த போட்டியை நினைத்து நெகிழ்ச்சியடைந்தார். அப்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்த ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடியது. அத்துடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மோதியது.
இதில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயம் காரணமாக விளையாடவில்லை. எனவே இளம் வீரரான ஹர்பஜன் சிங் களமிறக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீசிய ஹர்பஜன், 3 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
அப்போது ஹர்பஜனுடன் விளையாடிய அனுபவம் குறித்தே தற்போது கங்குலி கூறினார். அவர் கூறும்போது, “மற்றவர்கள் எல்லாம் ஹர்பஜனை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டதாக கூறினர். நான் அவர் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை சாய்த்தபோது கண்டேன். அப்போதே அவரைப் பிடித்துவிட்டது. இந்தியாவிற்கு மாற்றத்தை கொண்டு வரும் ஒரு வீரர் கிடைத்துவிட்டார் என நம்பினேன். அணில் கும்ளே இல்லாத நிலையில், மூன்று ஸ்பின்னர்களுடன் நாங்கள் களமிறங்கினோம். ஆனால் ஹர்பஜன் மட்டுமே விக்கெட்டுகளை சரித்தார். அப்போது அவர் பெரிதும் அனுபவம் இல்லாத வீரராக இருந்தபோதிலும், அவரது பந்துவீச்சு என்னை திகைத்துப்போக வைத்தது” என்றார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக கங்குலி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.