‘மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்று இருக்கலாம்’ - சச்சினை சீண்டிய மத்திய அமைச்சர்  

‘மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்று இருக்கலாம்’ - சச்சினை சீண்டிய மத்திய அமைச்சர்  
‘மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்று இருக்கலாம்’ - சச்சினை சீண்டிய மத்திய அமைச்சர்  

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பாராட்டியும் அவரிடம் கோரிக்கையையும் வைத்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ ட்வீட் செய்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற கௌரவத்தை நேற்று வழங்கியது. இந்தியா சார்பில் 6ஆவது வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009),கபில் தேவ்(2009),அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கௌரவத்திற்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஐசிசியின்  ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம்பெற்றதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களது சாதனைகள் பல விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக அமையும்.

எனினும் நீங்கள் இதேபோன்று உங்களது மாநிலங்களவை பதவி காலத்தில், நீங்கள் விவாதங்களில் பங்கேற்று இருந்தால் அந்தப் பதவியும் சிறப்பாக அமைந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தால், அந்த உரையை இந்தியாவே உற்று நோக்கியிருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 26 வரை மாநிலங்களவையில் எம்பியாக பதவி வகித்தார். இந்தக் காலத்தில் நாட்டிலேயே மிகவும் குறைந்த நாட்கள் அவைக்கு சென்ற எம்பியாக சச்சின் இருந்தார். அதாவது சச்சின் தனது 6 ஆண்டுகால பதவியில் வெறும் 8% நாட்கள் மட்டுமே அவைக்கு சென்றிருந்தார். அத்துடன் இவர் அவையில் நடைபெற்ற எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. எனவே இவர் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சூழலில் இவரின் மாநிலங்களவை பதவி செயல்பாடு குறித்து மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மறைமுகமாக விமர்சித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com