”நான்தான் 370 டிகிரில பேட்டிங் ஆட கத்துகொடுத்தேன்”-கலாய்த்த சாஹலுக்கு SKY-ன் வைரல் பதில்

”நான்தான் 370 டிகிரில பேட்டிங் ஆட கத்துகொடுத்தேன்”-கலாய்த்த சாஹலுக்கு SKY-ன் வைரல் பதில்
”நான்தான் 370 டிகிரில பேட்டிங் ஆட கத்துகொடுத்தேன்”-கலாய்த்த சாஹலுக்கு SKY-ன் வைரல் பதில்

ஐசிசியின் நம்பர் 1 டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முற்றிலும் மாறுபட்ட தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பொதுவாக டி20 போட்டிகளில் 30 பந்துகளில் 70 ரன்கள் அடிக்கும் வீரராக விளையாடும் சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 31 பந்துகளில் வெறும் 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேலும் இவ்வளவு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய ஒருவருக்கு டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் கூறலாம். போட்டியில் இறுதிவரை வெற்றிக்காக களத்தில் நின்று விளையாடியதால் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது. ஏனென்றால் போட்டியின் ஆடுகளம் அவ்வளவு கடினமானதாக இருந்தது. 

முற்றிலும் குறைவான ரன்களில் த்ரில்லர் போட்டியாக மாறிய இந்தியா-நியூசி டி20 போட்டி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்று 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை வென்று தொடரில் உயிர்ப்புடன் இருக்கும் முயற்சியோடு இந்தியா களமிறங்கியது. முதலில் பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குழப்பமான இலக்கை துறத்திய இந்திய அணியும் 11 ஓவரில் 50 ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து நியூசிலாந்து அணியின் அற்புதமான ஸ்பின் அட்டாக்கை தாக்குபிடிக்க முடியாத இந்திய அணியின் பேட்டர்கள், ரன்களை எடுக்க திணறினர். இறுதி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் தான், இந்திய அணியால் வெற்றிக்கான ரன்களை அடிக்க முடிந்தது. இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

239 பந்துகளில் 1 சிக்சர் கூட இல்லை!

ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாத டி20 போட்டியாக, இந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மாறியது.

239 பந்துகளை சந்தித்த இந்த போட்டியில் மொத்தமாகவே வெறும் 14 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது, மேலும் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் 2021ல் நடைபெற்ற பங்களாதேஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், 238 பந்துகளில் இந்த மோசமான சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. அதை பின்னுக்கு தள்ளி ஒரு புதிய மோசமான சாதனையை படைத்திருக்கிறது இந்த போட்டி.

போட்டிக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தை விமர்சித்திருந்தார், ஒரு டி20 போட்டிக்கான ஆடுகளமாக இது இல்லை, வீரர்களுக்கு விக்கெட்டானது அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சவாலாகவே இருந்தது, இதுபோன்ற போட்டியை நடத்துவதற்கு முன்னர் ஆடுகளத்தை முழுமையாக தயார் செய்யவேண்டும்” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் போட்டிக்கு பின்னர் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் மற்றும் சூர்யகுமார் யாதவ் மூன்று பேரும் கலந்துரையாடினர். பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய சாஹல், “ நம்முடைய மிஸ்டர் 360டிகிரி பேட்டரான சூர்யகுமார் யாதவ், இன்று ஒரு மாறுபட்ட புத்திசாலிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் களத்தில் இன்று நிதானமாக செயல்பட்டார், சூர்யாவின் இன்னொரு பக்கத்தை இந்த போட்டியில் நம்மால் பார்க்கமுடிந்தது. நான் உங்களை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறேன், பொதுவாக நீங்கள் 30 பந்துகளில் 70 ரன்களை அடிக்கக்கூடியவர், ஆனால் இன்றைய போட்டி அப்படி அமையவில்லை, இன்றைய போட்டியில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது? “ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “ வாசிங்டன் அவுட்டான பிறகு ஒருவர் களத்தில் இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டியது முக்கியமானதாக இருந்தது. நான் ஹர்திக் இடம் அதை தான் கூறினேன், போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்றால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்று தெரிவித்தார்.

பின்னர் அடுத்த கேள்வியை கேட்ட சாஹல், சூர்யகுமார் யாதவை நக்கலடித்தார். அதில்,” நான் உனக்கு 370 டிகிரில பேட்டிங் பண்ண கத்துகொடுத்தன். ஆனால் இந்த விக்கெட் வேறுமாதிரியாக இருந்தது, ஒருவேளை என்னுடைய ரஞ்சி டிரோபி பேட்டிங் வீடியோவை பார்த்து கற்றுகொண்டாயா?” என நக்கலாக கேள்வியெழுப்பினார்.

பதிலுக்கு சிரித்துகொண்டே கலாய்த்த சூர்யகுமார் யாதவ், “ உண்மையில், கடந்த தொடரில் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததை நான் மறக்கவில்லை. மேலும் பேட்டிங்கில் நான் இன்னும் எப்படி முன்னேற வேண்டும் என்பதை நீங்கள் தான் எனக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மக்களே தயவு செய்து கவனமாகக் கேளுங்கள், இதை நீங்கள் நகைச்சுவையாகவெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது, எங்கள் அண்ணன் இங்கே பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். அவர் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறார்” என கலாய்த்ததும் மூன்று பேரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com