”நீங்க சின்னவயசுல என் பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்குறேன்”- SKYவை கேலி செய்த டிராவிட்!

”நீங்க சின்னவயசுல என் பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்குறேன்”- SKYவை கேலி செய்த டிராவிட்!
”நீங்க சின்னவயசுல என் பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்குறேன்”- SKYவை கேலி செய்த டிராவிட்!

சூர்யகுமார் யாதவ் ஒரு நம்பமுடியாத ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, தன்னுடைய 3ஆவது டி20 சதத்தை பதிவு செய்ததிற்கு பிறகு, சூர்யாவிடம் கலந்துரையாடிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “உங்க சின்ன வயசுல நீங்க என்னுடைய பேட்டிங்கை எல்லாம் பார்த்ததில்லைனு நினைக்குறன்” என்று சூர்யாவின் அதிரடி பேட்டிங் குறித்து கேலியாக கூறினார்.

சனிக்கிழமையன்று இலங்கைக்கு எதிரான டி20 தொடரை யார் வெல்வது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தின் மூலம், டி20 போட்டிகளில் தனது 3ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தியிருந்தார். சூர்யகுமாரின் இந்த அதிரடியான சதத்தால், 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு ராகுல் டிராவிட், சூர்யகுமார் யாதவை பாராட்டி பேசியுள்ளார். அப்போது 32 வயதான சூர்யகுமார் யாதவ் ”சிறு வயதாக இருந்தபோது, நான் பேட்டிங் செய்வதைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்” என்று கேலி செய்தார்.

ஏன் அவர் அப்படி சொன்னாரென்றால், கிரிக்கெட் வடிவத்தின் இருவேறு பரிமாணங்களாக ராகுல் டிராவிட் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இருக்கின்றனர். முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரரான ராகுல் டிராவிட் அவருடைய சிறப்பான தடுப்பாட்டத்தின் காரணமாக ”இந்திய அணியின் தடுப்புச்சுவர்” என்று அழைக்கப்படுகிறார், தற்போதைய இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் அவருடைய கிரவுண்டின் எந்த பக்கத்திற்கும் பந்தை விரட்டக்கூடிய திறனால் “இந்திய அணியின் 360 டிகிரி பேட்டர்” என்று அழைக்கப்படுகிறார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் டிராவிட் இருவரின் உரையாடலிற்கு முன், ஏன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுகிறார் என்பதற்கான சில காரணங்கள்,

இந்திய அணியின் “வால்”-தடுப்புச்சுவர்!

இந்தியாவின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்துவிட்டால், பின்னர் களமிறங்கும் ராகுல் டிராவிட் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் போதும் போதும் என பந்துவீச, அதை எதிர்கொண்டு ரன்களை பெரிதாக சேர்க்காமல், விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அணியை மீட்பதில் கவனம் செலுத்துவார். பின்னர் பந்துவீச்சாளர்கள் சோர்வாகும் போது பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுப்பார்.

பின்னர் போட்டியின் இடையில் புதியபந்தை எதிரணி எடுக்கும் நேரங்களில், டிஃபண்டிங் மோடிற்கு சென்றுவிடுவார். அதுவரை அவர் 100 ரன்களை கடந்திருந்தாலும், அந்த தருணங்களில் அவர் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்துவார். 140+ கிமீ வேகத்தில் வந்து பந்துவீசும் பவுலர்கள், பந்தை பேட்டிற்கு அருகிலேயே அவர் தடுத்து நிறுத்துவதை பார்த்தால் கொஞ்சம் கடுப்பாகித்தான் விடுவார்கள். அந்தளவிற்கு தடுப்பாட்டத்திற்கு பெயர் போன வீரர் என்றால் அது ராகுல் டிராவிட் தான்.

உலக கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்த ஒரே வீரர்-30,000 பந்துகள்

உலக அரங்கில் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்றுவரை கைகளில் வைத்திருப்பவர் ராகுல் டிராவிட் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 286 இன்னிங்களில் விளையாடி இருக்கும் ராகுல் டிராவிட், 31,258 பந்துகளை எதிர்கொண்டு விளையாடி உள்ளார். 30ஆயிரம் பந்துகளை சந்தித்த முதல் மற்றும் ஒரே வீரர் ராகுல் டிராவிட் தான்.

அதிக பார்ட்னர்ஷிப் போட்ட ஒரே வீரர்- 88 நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் விக்கெட்டை காப்பாற்றி போட்டியை டிராவிற்கு கொண்டு செல்லவேண்டும், அந்த போட்டியில் கிட்டத்தட்ட 100 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை அடித்திருப்பார் ராகுல் டிராவிட். முதல் ரன்னிற்கு அவர் எடுத்துக்கொண்ட பந்துகள் 40 பந்துகள். அதேபோல் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்டனர்ஷிப் போட்டு 100 ரன்கள் எடுத்த பட்டியலில், 88 நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் ஈடுபட்டுள்ள ஒரே வீரராக ராகுல் டிராவிட் தான் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடித்து 112 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், இந்திய அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்ற அபாரமான வெற்றிக்கு அழைத்து சென்றார். போட்டியில் கிரவுண்டின் நாலாபுறமும் வானவேடிக்கை நிகழ்த்திய சூர்யகுமார், சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய 3ஆவது சதத்தை பதிவு செய்தார். ஒபனராக களமிறங்காமல் பின்வரிசையில் களமிறங்கி 3 டி20 சதங்களை அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற புதிய சாதனையை படைத்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ்.

நீங்கள் சிறுவயதில் என்னுடைய பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்குறன் - ராகுல் டிராவிட்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதற்கு பிறகு, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சூர்ய குமார் யாதவை நேர்காணல் செய்தார். சூர்யகுமார் யாதவின் அபாரமான ஆட்டத்தையும், கிரவுண்டின் எல்லா பக்கமும் அடிக்கக்கூடிய அவரது தனித்திறனை புகழ்ந்த டிராவிட், ”சூர்யகுமார் யாதவ் சிறு வயதாக இருந்தபோது என்னுடைய பேட்டிங்கையும், நான் விளையாடுவதையும் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்’ என்று கேலி செய்தார்.

அந்த நேர்காணலில் சூர்யகுமார் குறித்து பேசிய டிராவிட், “என் பக்கத்தில் இங்கே ஒருவர் இருக்கிறார், அவர் சிறுவயதாக இருந்தபோது என்னுடைய டிஃபண்டிங்க் செய்யக்கூடிய பேட்டிங்கை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். உண்மையை சொல்லுங்கள் சூர்யா நீங்கள் பார்த்ததில்லை தானே” என்று கேட்டார். அதற்கு சூர்யகுமார், ”இல்லை பார்த்திருக்கிறேன்” என சிரித்துகொண்டே பதில் சொன்னார்.

மேலும், ”நீங்கள் ஒரு தனித்துவமான வீரர். உங்களுக்குள் இருக்கும் அபாரமான பேட்டிங் திறமை மற்றும் தற்போதைய உங்களது பாஃர்ம் இரண்டும் என்னை, உங்களுடைய ஒவ்வொரு போட்டியிலும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு போட்டியில் நீங்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், அந்த பேட்டிங்கை பார்த்து இதுதான் இவர் திறமை என்று நினைத்தால், அதற்கு அடுத்த போட்டிகளில் களமிறங்கி அதைவிட சிறப்பான ஒரு ஆட்டத்தை நீங்கள் களத்தில் நிகழ்த்தி காட்டுகிறீர்கள். உங்களுடைய சிறந்த டி20 இன்னிங்ஸைப் இன்னும் பார்க்கவில்லை என்றே நினைக்க வைக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடுத்தடுத்து எங்களுக்கு இன்னும் சிறப்பாக ஏதாவது செய்து காட்டுகிறீர்கள்" என்று டிராவிட் சூர்யக்குமாரை வியந்து பாராட்டினார்.

பின்னர் டிராவிட் சூர்யகுமாரிடம், உங்களுடைய 3 டி20 சதங்களில் எதை சிறந்ததாக பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய சூர்யகுமார், “ நான் சதங்கள் அடித்த 3 போட்டியிலும், அணிக்கு தேவையான மற்றும் கடினமான நேரத்தில் இறங்கி விளையாடி இருக்கிறேன். விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, அணிக்கு தேவையான இடத்தில் நான் சிறப்பாக விளையாடி என்னுடைய பங்களிப்பை அளித்திருக்கிறேன். அதனால் 3 போட்டிகளில் சிறந்ததாக ஒன்றை என்னால் தனியாக பிரிக்க முடியாது. மூன்றுமே எனக்கு முக்கியமான போட்டியாகவே அமைந்தது.

இதற்கு முன்பும் நான் இதை சொல்லி இருக்கிறேன், என்னுடைய ஆட்டத்தை முடிந்தவரை ரசித்து, வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். கடினமான நேரங்களில் நான் களமிறங்கும் போது, என்னால் இதை செய்யமுடிகிறது. மேலும் முக்கியமான நேரங்களில் அணிக்காக அதை செய்ய முயற்சிக்கிறேன். இந்திய அணிக்காக என்னால் நன்றாக செயல்பட முடிந்தால் அதிகமாக மகிழ்ச்சி அடைவேன்” என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com