`நான் கேட்டது... ஆனா அவர் கொடுத்தது...’- விராட் கோலி ரசிகரின் வைரல் ட்வீட்!
“கோலி அவருடைய 71ஆவது சதத்தை அடிக்கவில்லை என்றால் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” என செய்தி பதாகையோடு மைதானத்தில் அமர்ந்திருந்த விராட் கோலி ரசிகர் ஒருவரின் தற்போதைய டிவிட்டர் பதிவானது வைரலாக பரவி வருகிறது.
அந்தப் பதிவை தெரிந்துக்கொள்ளும் முன்னர், விராட்டின் பேக் டூ ஃபார்ம் பற்றி தெரிந்துக்கொள்வோம்!
`கிரிக்கெட் கடவுள்’ என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை குவித்திருந்தாலும் ஓவ்வொரு சதத்தின் போதும் 90 ரன்களில் இருந்து 100 ரன்களுக்குள் அடியெடுத்து வைக்க பலபந்துகளை எடுத்துக்கொள்வார். ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் சதங்களை பதிவு செய்வதை சாதரணமாக நிகழ்த்தி காட்டியவர் தற்போதைய ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான விராட்கோலி.
கன்வர்சேஷன் ரேட் எனப்படும் 50 ரன்களிலிருந்து 100 ரன்களுக்கு எளிதாய் எடுத்து செல்பவர்கள் வரிசையில், ஒருநாள் போட்டிகளில் 43+ சராசரியுடன் இருக்கும் விராட்கோலி, டெஸ்ட் போட்டிகளில் டான் பிரேட்மேனிற்கு பிறகு 54 சராசரியுடன் தற்போதைய கிரிக்கெட்டர்கள் எவரும் தொடமுடியாத இடத்தில் இருக்கிறார். மேலும் வருடத்திற்கான சதங்கள் சராசரியில் 6 சதங்களை வைத்திருக்கும் ஒரே வீரரும் கோலி தான். அந்த அளவிற்கு குறைவான இன்னிங்ஸ்களில் அதிகமான சதங்களை பதிவு செய்து காலத்திற்குமான சிறந்த வீரராக உருவெடுத்திருக்கிறார் விராட் கோலி.
இந்த நிலையில் தான் விராட் கோலி தன்னுடைய 70ஆவது சதங்களுக்கு பிறகு 71ஆவது சர்வதேச சதத்தை பதிவு செய்ய 1000 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டார். கொரோனா அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவருடைய பேட்டிங் பார்ம் பாதிப்பிற்குள் உள்ளானது. என்னதான் கோலி அரைசதங்களை பதிவுசெய்திருந்தாலும், அவர் அதற்கு முன்னர் ஏற்படுத்தியிருந்த எதிர்ப்பார்ப்பை அவரால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது. அந்த 1000 நாட்கள் இடையேயான கால கட்டத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருந்தார் விராட்கோலி. அவருடைய 71ஆவது சதத்திற்காக இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் ரசிகர்களும் அதிகமாகவே காத்திருந்தனர் என்றே சொல்லலாம்.
விராட் கோலி 71ஆவது சதமடிக்காதவரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் விராட்கோலியின் ரசிகரான ஆமன் அகர்வால் என்பவர், விராட் கோலி விளையாடும் போட்டி ஒன்றில் “விராட் கோலி 71ஆவது சதத்தை அடிக்காதவரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” என்ற பதாகையை பிடித்தபடி பங்கேற்று இருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி, 1019 நாட்களிற்கு பிறகு 2022 செப்டம்பர் 8ஆம் தேதி ஆசியக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது 71ஆவது சதத்தை பதிவு செய்து, இந்திய ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பிற்கு முடிவு கட்டினார். 61 பந்துகளில் 122 ரன்களை குவித்திருந்த விராட் கோலி, டி20 வடிவத்தில் தனது சதத்தை பதிவு செய்தார்.
71ஆவது சதத்திற்கு பிறகு தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிக்காட்டிய விராட் கோலி, டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நம்பமுடியாத இடத்திலிருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக, எளிதில் அடிக்கமுடியாத நல்ல லைன்-லெந்த் பந்துவீச்சில் ஸ்டிரைட் லாங்க் ஆன் மேல் அவரடித்த சிக்சரானது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட்கோலியின் அந்த இன்னிங்ஸை ஐசிசி கௌரவித்து சிறப்பித்தது.
3 மாத இடைவெளியில் 72ஆவது சதம், 3 வார இடைவெளியில் 73ஆவது சதம், 3 நாட்கள் இடைவெளியில் 74ஆவது சதம்!
அதனைத்தொடந்து டிசம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச 72ஆவது சதத்தை எடுத்துவந்த விராட் கோலி, 71ஆவது சதத்திற்கு பிறகான மூன்று மாத இடைவெளியில் 72ஆவது சதத்தை எடுத்து வந்து அசத்தினார். அதையடுத்து 73ஆவது சதத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட கால இடைவெளியானது வெறும் 3 வாரங்கள் தான், 2023ஆம் ஆண்டின் முதல் ஒருநாள் சதத்தை இலங்கை அணிக்கு எதிராக எடுத்துவந்தார் விராட் கோலி.
பின்னர் 74ஆவது சதத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட கால இடைவெளி 3 நாட்கள் மட்டுமே தான், தன்னுடைய பழைய பீக் டைம் ஃபார்மை எடுத்துவந்திருக்கும் விராட் கோலி, சொந்த நாட்டின் மைதானத்தில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 21 சதங்கள் விளாசி சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
நான் 71ஆவது சதம் தான் கேட்டேன்! என் திருமண நாளிற்குள் அவர் 74ஆவது சதத்தை அடித்துவிட்டார்!
இந்நிலையில் இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி தனது அடுத்தடுத்த சதங்களை பூர்த்தி செய்த நிலையில், அவருடைய ரசிகரனா ஆமன் அகர்வால் என்பவர், டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனது திருமண உடையில் டிவி முன் நிற்பதுபோன்ற புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "நான் 71ஆவது சதத்தை கேட்டேன், ஆனால் எனது சிறப்பிற்குரிய நாளில் அவர் 74ஆவது சதம் அடித்துவிட்டார்" என்ற செய்தி குறிப்போடு ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அந்த புகைப்படத்தின் ஒரு பக்கத்தில், "விராட் கோலி தனது 71ஆவது சதத்தை அடிக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்ற வாசக பதாகையை வைத்திருக்கிறார். மறுபுறம், அவர் திருமண ஆடை அணிந்திருக்கும் படம் உள்ளது.”
தற்போது அந்த ரசிகரின் டிவிட்டர் பதிவானது வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.