”அவர் ஒரு மதிப்புமிக்க வீரராக இருப்பார்” - தோனியை பிசிசிஐக்கு பரிந்துரைத்த போத்தார் மறைவு!

”அவர் ஒரு மதிப்புமிக்க வீரராக இருப்பார்” - தோனியை பிசிசிஐக்கு பரிந்துரைத்த போத்தார் மறைவு!
”அவர் ஒரு மதிப்புமிக்க வீரராக இருப்பார்” - தோனியை பிசிசிஐக்கு பரிந்துரைத்த போத்தார் மறைவு!

'இந்த பையன அணிக்குள்ள எடுங்க, அவர் ஒரு மதிப்புமிக்க வீரராக இந்திய அணிக்கு மாறுவார்' என, முதலில் தோனியை பிசிசிஐக்கு பரிந்துரைத்த பெங்கால் அணியின் முன்னாள் கேப்டன் பிரகாஷ் போதார் காலமானார்.

முன்னாள் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர் பிரகாஷ் போத்தார் டிசம்பர் 29, 2022 அன்று தனது 82 வயதில் காலமானார். முன்னாள் பெங்கால் அணித் தலைவர், திறமை வள மேம்பாட்டு அதிகாரியாக இருந்தபோது எம்எஸ் தோனியின் பெயரை பிசிசிஐக்கு பரிந்துரைத்திருந்தார். அதற்கு பிறகு இந்திய அணிக்குள்ளும், உலக கிரிக்கெட்டிலும் தோனி படைத்தது ஒரு சகாப்தம்.

1940 அக்டோபர் 25 அன்று கொல்கத்தாவில் பிறந்த பிரகாஷ் போத்தார், வங்காளம் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார். அவரது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில், போத்தார் 74 முதல்தர போட்டிகளில் விளையாடி 3,868 ரன்களை 40 சராசரியில் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகும், அதே நேரத்தில் அவர் மொத்தம் 11 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

போத்தார் 1976/77 சீசனில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். முதல் லிஸ்ட்-ஏ போட்டியில் விளையாடிய அவர், 28* ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தோனியின் எழுச்சியில் பிரகாஷ் போத்தார் எப்படி முக்கிய பங்கு வகித்தார்!

எம்எஸ் தோனி எல்லா காலத்திலும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பலரால் கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த காலத்தில், எம் எஸ் தோனி பல மகத்தான வெற்றிகளைப் பெற்றார். ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் எம்எஸ் தோனி. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு அழைத்துச் சென்ற பெருமையும் தோனியையே சேரும்.

இப்படி ஒரு அபாரமான திறமையை வெளிக்கொணர ஒரு உந்துதல் நபராக இந்தியாவிற்காக ஒருவர் இருந்துள்ளார், அவர் தான் போத்தார். இந்திய அணியில் பங்குபெற்று பல கோப்பைகளை வென்று தோனி உதவுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பிரகாஷ் போத்தார் அவரைக் கண்டுபிடித்து, பிசிசிஐயின் உயர் நிர்வாகத்திற்கு அவரது பெயரைப் பரிந்துரைத்தார்.

2002ல், BCCI நாடு முழுவதும் உள்ள இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய திறமைகளை விரைவாகக் கண்காணிக்க திறமை வள மேம்பாட்டு (TRD) அதிகாரிகளை அறிமுகப்படுத்தியது. ஒரு டிஆர்டி அதிகாரி போத்தார், அப்போது தான் தோனியின் பெயரை பரிந்துரைத்தார்.

தோனி குறித்து பேசியிருந்த போத்தார், ”தோனியை முதலில் பார்த்தபோது, அவருடைய திறமை மற்றும் சக்தியை பயன்படுத்திய விதத்தை நாம் முறைப்படுத்தினால், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு மதிப்பு மிக்க வீரராக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். அதனால்தான் நான் அவரை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பரிந்துரைத்தேன்" என்று தோனி பற்றி போத்தார் ஒருமுறை கூறினார்.

போத்தார் ஒரு வருடம் TRD அதிகாரியாக பணிபுரிந்தார் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் அவர் ஜூனியர் தேசிய தேர்வாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com