“எனக்கும் வாய்ப்பு கிடைக்கும்; வலிமையுடன் திரும்பி வருவேன்”- மேரி கோமிடம் வீழ்ந்த நிஹாத்..!

“எனக்கும் வாய்ப்பு கிடைக்கும்; வலிமையுடன் திரும்பி வருவேன்”- மேரி கோமிடம் வீழ்ந்த நிஹாத்..!
“எனக்கும் வாய்ப்பு கிடைக்கும்; வலிமையுடன் திரும்பி வருவேன்”- மேரி கோமிடம் வீழ்ந்த நிஹாத்..!

இந்திய வீராங்கனை மேரி கோம் அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். போட்டியின் முடிவில் மேரி கோம் கை குலுக்க மறுப்பு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

டோக்கியோவில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில், குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரி கோம் நேரடியாக தகுதி பெறுவதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்தது. இதற்கு இளம் வீராங்கனை நிஹாத் ஸரீன் எதிர்ப்பு தெரிவித்து போட்டி அடிப்படையில் தான் வெற்றியை தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இங்கிருந்தே போட்டி ஆரம்பமானதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். இதனையடுத்து ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கப்போகும் வீராங்கனையை தேர்வு செய்யும் போட்டி டெல்லியில் நடைபெற்றது.

ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீராங்கனை மேரிகோம், இளம் வீராங்கனை நிஹாத் ஸரீனை பந்தாடினார். இதில், நிஹாத் ஸரீனை 9-க்கு ஒன்று என்ற புள்ளி கணக்கில் எளிதில் வீழ்த்தியதுடன், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடவும் தகுதி பெற்றார் மேரி கோம்.

போட்டியின் முடிவில் மேரி கோம், நிஹாத் ஸரீனுடன் கை குலுக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போட்டியில் பங்கேற்ற அதே ஆக்ரோஷத்துடன் பதில் அளித்திருக்கிறார் மேரி கோம். ஏன் ஸரீனுடன் கை குலுக்க வேண்டும், முதலில் அவர் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார். எந்தவொரு இந்திய குத்துச்சண்டை வீரரும் சாதிக்க முடியாததை தம்மால் சாதிக்க முடிந்ததாக கூறிய மேரி கோம் அணியில் இடம்பெற வேண்டும் என்றால் வளையத்திற்குள் வெற்றி பெற வேண்டும் என ஸரீனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வெற்றி பெற்ற மேரிகோமை கட்டி அணைத்து வாழ்த்த முயற்சித்ததாகவும், அதை அவர் தவிர்த்துவிட்டதாகவும் தோல்வியடைந்த நிஹாத் ஸரீன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தான் வேதனை அடைந்ததாகவும், இளம் வீரர்களை மூத்த வீரர்கள் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேரி கோம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் ஆனால் அதனை தான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை எனவும் ஸரீன் தெரிவித்தார். இறுதியாக, தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அப்போது வலிமையுடன் திரும்பி வருவேன் என்றும் பதில் கொடுத்திருக்கிறார் ஸரீன்.

சமூக வலைத்தளங்களில் மேரி கோமுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன. எனினும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சர்ச்சைகளுக்கு அவர் பதில் அளிப்பார் என்கின்றனர் மேரி கோமின் ஆதரவாளர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com