”30 வயதில்தான் முதல்போட்டி! நிராகரிக்கப்பட்டாலும் நான் உடைந்து போகவில்லை” - சூர்யகுமார்

”30 வயதில்தான் முதல்போட்டி! நிராகரிக்கப்பட்டாலும் நான் உடைந்து போகவில்லை” - சூர்யகுமார்
”30 வயதில்தான் முதல்போட்டி! நிராகரிக்கப்பட்டாலும் நான் உடைந்து போகவில்லை” - சூர்யகுமார்

”அணித்தேர்வாளர்கள் என்னை நிராகரித்தாலும் நான் எரிச்சல் அடையவில்லை, உடைந்தும் போகவில்லை” என்று இந்திய அணிக்குள் வருவதற்கான தன்னுடைய முயற்சிகள் குறித்து பேசியுள்ளார் இந்தியாவின் தற்போதைய ஸ்டார் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ்.

2021ஆம் ஆண்டு இந்திய அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இந்திய அணியில் இடம் பெறுவதற்கான தனது போராட்டங்கள் குறித்து ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மும்பையில் பிறந்த சூர்யா, பல ஆண்டுகளாக ஹோம் சர்க்யூட் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகியவற்றில் மிகவும் வெற்றிகரமாக இருந்த போதிலும், தேசிய அணியில் அறிமுகமாகும்முன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக தெரிவித்தார்.

முதல்தர கிரிக்கெட்டில் அபாரமான ரெக்கார்டு இருந்தும் அணியில் இடம் இல்லை!

இந்திய அணியில் அறிமுகமாவதற்கு முன்னதாக முதல் தர கிரிக்கெட் போட்டிகள், லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த ஸ்டிரைக் ரேட்டுடன் அபாரமான ரன்களை பெற்றிருந்தார் சூர்யகுமார் யாதவ். என்ன தான் அபாரமான ரன்களை பெற்றிருந்தாலும் தொடர்ந்து இந்திய அணியின் ஜெர்சியில் ஆடவேண்டும் என்ற அவருடைய கனவு தொடர்ந்து நிகாரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

முதல் தரப் போட்டிகளில் 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அவர், 5416 ரன்கள் குவித்து 46 சராசரியுடன் 14 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடித்திருக்கிறார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 108 இன்னிங்களில் 3 சதங்கள், 19 அரைசதங்களுடன் 3238 ரன்கள் குவித்திருக்கிறார். மற்றும் டொமஸ்டிக் டி20 வடிவங்களில் அவர் சிறந்த ஸ்கோரை கொண்டுள்ளார், 214 இன்னிங்ஸ்களில் 5631 ரன்கள் குவித்திருக்கும் அவர், 149 ஸ்டிரைக் ரேட்டுடன் 2 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

30 வயதில் தான் வாய்ப்பு கிடைத்தது!

என்ன தான் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல் பட்டாலும், இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்ற அவருடைய கனவு, அவருடைய சிக்சர் போல் தூக்கி அடிக்கப்பட்டுகொண்டே இருந்தது. பலமுறை அவர் தேர்வாளர்களின் மூளைக் கதவை தட்டியபோதும், அது திறக்கப்படவே இல்லை.

பல வருடங்கள் நிகழ்த்தப்பட்ட அவருடைய போராட்டம் ஒரு வழியாக 30-31 வயதில் தான் நிறைவேறியது. மார்ச் 14, 2021ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார் சூர்யகுமார் யாதவ். அதற்கு பிறகு அவர் குறுகிய நேரத்தில் ஒரு குட்டி சகாப்தத்தையே நிகழ்த்தி காட்டிவிட்டார்.

இந்திய அணிக்காக 40 டி20 போட்டிகளில் 44 சராசரியுடன், 2 டி20 சதங்கள் மற்றும் 12 அரைசங்களுடன் 1408 சேர்த்துள்ளார். டி20களில் அவருடைய பேட்டிங் ஸ்டிரைக்ரேட் 180 ஆகும். 16 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 384 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் அணியில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. பேக்கப் வீரராக மட்டுமே ஒருமுறை அணியில் எடுக்கப்பட்டிருந்தார்.

நிராகரிக்கப்பட்டாலும் உடைந்துபோகவில்லை -  சூர்யகுமார்!

அணிக்காக தேர்வாகாத போது இருந்த மனநிலை குறித்து பேசியிருக்கும் சூர்யகுமார் யாதவ், “எனக்கு எரிச்சல் வந்தது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால், அடுத்த கட்டத்திற்கு செல்ல நான் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்று எப்போதும் நினைப்பேன். எனவே என்னுடைய கடின உழைப்பை நான் தொடர்ந்து போட்டுக்கொண்டே இருந்தேன், நீங்களும் உங்களுடைய விளையாட்டை அனுபவிக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு எளிய பயிற்சியாக இருந்தாலும் சரி அல்லது ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சரி.

ஆனால் நான் நிகாரிக்கப்பட்டதற்கு பின்பு நான் விளையாட்டை ரசிக்கவில்லை, நான் அதை சுவைக்கவே ஆரம்பித்தேன். விளைவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, செயல்பாட்டில் கவனம் செலுத்தினால், நான் ஒரு நாள் அணித்தேர்வாளர்களின் கதவை உடைப்பேன் என்று எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

டொமஸ்டிக் ஆட்டம் தான் உங்களுடைய நிரந்தரம்!

இண்டர்நேஷனல் போட்டிகளுக்காக நீங்கள் எதையும் புதிதாக எடுத்துச்செல்ல போவதில்லை, உள்நாட்டு ஆட்டத்தில் நீங்கள் என்ன வெளிப்படுத்துகிறீர்களோ அதுதான் உங்களுடைய நிரந்தரமான ஆட்டத்திறன். மற்றபடி உலக அரங்கில் அதை எப்படி மெருகேற்றி கொள்கிறீர்களோ அதுதான் உங்களுக்கான முன்னேற்றம் என்று கூறியுள்ளார் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ். 30 வயதில் அறிமுகமான சூர்யாவிற்கு தற்போது 32 வயதாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com