‘ஈ சாலா கப் நம்தே’ - கனவை நினைவாக்க ‘கோலி’ போடும் திட்டம்..!

‘ஈ சாலா கப் நம்தே’ - கனவை நினைவாக்க ‘கோலி’ போடும் திட்டம்..!
‘ஈ சாலா கப் நம்தே’ - கனவை நினைவாக்க ‘கோலி’ போடும் திட்டம்..!

ஐபிஎல் போட்டிகளில் ஆண்டு தோறும் கோப்பைக்காக ஆசைப்பட்டு, கடைசியில் தோல்வியை மட்டுமே தூக்கிச் செல்லும் அணிகளுள் ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற உற்சாக வசனத்துடன், இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற உறுதிமொழியுடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைக்கிறது. இருந்தாலும் ஆண்டு தோறும் அந்த அணி தங்கள் வசனத்தை மாற்றமால் ‘ஈ சாலா கப் நம்தே’ என முழங்கி வருகிறது. அந்த அணியின் ரசிகர்களும், குணா படத்தில் வரும் கமல் ‘அபிராமி அபிராமி’ என கூறுவது போல ‘ஈ சாலா கப் நம்தே’ என ஒவ்வொரு வருடமும் கூறுகின்றனர். ஆனால் ஒரு வருடமும் கோப்பையை வென்ற பாடில்லை.

2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மொத்தம் 12 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒருமுறையும், அதே ஹைதராபாத் அணி முன்னதாக டெக்கான் சார்சஸ் என்ற பெயரில் இருக்கும்போது ஒருமுறையும் வென்றுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இருக்கின்றன. இதில் பலமாக இருந்தும் பரிதாபமாக வெளியேறும் அணி பெங்களூர் தான்.

இத்தனைக்கும் இந்திய அணியின் கேப்டனாக வெற்றிகளை வாரி குவிக்கும் விராட் கோலி தான் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனாலும் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தை பிடித்தது பெங்களூர். அந்த அணியின் தோல்வியை பார்த்த மற்ற ரசிகர்கள் கூட, ஒருமுறை ஜெயித்துக்கொள்ளட்டுமே என இறக்கப்படும் அளவிற்கு பெங்களூரின் நிலைமை மோசமடைந்தது. அதுமட்டுமின்றி பெங்களூர் அணியை கிண்டல் செய்தே கடந்த ஆண்டு ஐபிஎல் முழுவதும் மீம்ஸ்கள் பறந்தன. குறிப்பாக, ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற வார்த்தை வைரலாகிப்போனது. அந்த வார்த்தையை வைத்தே ஏராளமான மீம்ஸ்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டி, உண்மையிலேயே கோப்பை வென்று ‘ஈ சாலா கப் நம்தே’ என மைதானத்தில் கர்ஜிக்க வேண்டும் என்ற வெறியுடன் விராட் கோலி இருக்கிறார் எனத் தெரிகிறது.

இதற்காக அவர் பெங்களூர் அணியில் பெரும் மாற்றத்தை அதிரடியாக செய்திருக்கிறார். இந்த முறை ஏலத்திற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்து 12 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் முன்னணி வீரர்களான மார்கஸ் ஸ்டொயினிஸ், சிம்ரான் ஹெட்மெயர், நாதன் கவுல்டர்-நைல், கோலின் டி கிரான்ஹோம், டிம் சவுதி மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோரும் அடக்கம். இதைத்தொடர்ந்து நடந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் ஃபின்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன், தென்னாப்ரிக்க வீரர்கள் கிரிஸ் மோரிஸ், மீண்டும் டேல் ஸ்டெயின் மற்றும் இலங்கை வீரர் இசுரு உதானா ஆகியோரை பெங்களூர் அணி வாங்கியது. இதுதவிர இந்திய இளம் வீரர்களான பவன் மற்றும் அஹமத் ஆகியோரும் வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த புதிய வீரர்களைக் கொண்டு ஒரு பலமான அணியை கட்டமைக்க விராட் கோலி திட்டமிட்டிருக்கிறார். இவர்களுடன் அணியில் ஏற்கனவே இருக்கும் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், பார்திவ் படேல், மொயின் அலி, யஸ்வேந்திர சாஹல், பவன் நெகி, உமேஸ் யாதவ், சிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, உள்ளிட்ட வீரர்களும் இணைந்தால், சிறப்பான அணியை தேர்வு செய்யலாம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகமும் திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் உருவாகும் புதிய அணியை, இந்திய அணியைப் போன்றே வழி நடத்தி கோப்பையை வெல்லலாம் எனவும் கோலி திட்டமிட்டுள்ளார். இவ்வாறாக விராட் கோலியின் திட்டங்கள் நிறைவேறி, அவர் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ‘ஈ சாலா கப் நம்தே’ எனக் கூறிக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்களின் கனவாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com