“கடைசி 5 ஓவரில் இப்படியா சிங்கிள் அடிப்பீர்கள்?” : தோனி - கேதர் மீது ஆவேசமான ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதானமான ஆட்டம் ரசிகர்களை டென்ஷன் ஆக்கியது.
உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய 5 போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணிக்கு இது முதல் தோல்வி ஆகும்.
நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், கடைசி கட்டத்தில் போராடாமலே தோற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் அடைய செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி, அதிர்ச்சி அளித்தாலும் விராட் கோலி 66, ரோகித் சர்மா 102 ரன்கள் அடித்து வெற்றிக்கு கொஞ்சம் வழிவகுத்தனர். ஹர்திக் - ரிஷப் பண்ட் ஜோடியும் சற்று நேரம் தாக்குப்பிடித்து விளையாடியது. ரிஷப் 32 ரன்னில் ஆட்டமிழக்க, 45 ஆவது ஓவரில் 45 எடுத்த நிலையில் ஹர்திக் அவுட் ஆனார்.
ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர் ஆட்டமிழந்த போது 5.1 ஓவரில் அதாவது 31 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ஓவருக்கு 14 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. இது மிகவும் கடினமான ஸ்கோர் என்பது எல்லோருக்கும் தெரியும். களத்தில் தோனியும், கேதர் ஜாதவும் இருந்தனர்.
ஆனால், தோனியும், கேதர் ஜாதவும் விளையாடிய விதம் உண்மையில் ரசிகர்களை அவ்வளவு டென்ஷன் ஆக்கியது. கடைசி நேரத்தில் இருவரும் அத்தனை சிங்கிள் ரன் அடித்தார்கள். பெரும்பாலும் ஹிட் அடிக்க அவர்கள் முயற்சிக்கவே இல்லை. இந்திய அணி வெற்றி பெறாதது கூட யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் இந்த ஜோடி விளையாடிய விதம்தான் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
தோனி - கேதர் ஜோடி 31 பந்துகளில் 20 சிங்கிள் ரன்கள் அடித்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் கடைசி கட்டத்தில் 7 டாட் பந்துகள். மொத்தமே இந்த ஜோடி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தனர். அதிகமான ரன்கள் தேவைப்படும் நேரத்தில் விளையாடிய கேதர் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தாலும் கடைசி நேரத்திலும் அவர் சிங்கிள் மட்டுமே அடித்தது ரசிகர்களை கோபமடைய செய்தது.
நேற்று போட்டி முடிந்ததில் இருந்து தோனி - கேதர் ஜாதவின் பேட்டிங்கை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லாமல், மிகவும் சாதாரணமாக தோனியும், கேதர் ஜாதவும் சிங்கிள் அடித்ததை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவரான தோனி, நேற்று பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை சிறப்பாக முடித்து வைத்தார் என சிலர் பதிவிட்டனர். அதாவது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரக் கூடாது என்பதற்காகவே தோனி - கேதர் ஜோடி வேண்டுமென்று இப்படி விளையாடியதாக கருத்து தெரிவித்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி சில பிரபலங்களும் இவர்களது பேட்டிங் குறித்து அதிருப்தியை தெரித்து இருந்தனர்.