Gujarat Titans: 'சாம்பியன்களை உருவாக்கிய சாம்பியன்கள்'-இவங்களுக்கும் க்ரெடிட் கொடுங்க பாஸ்

Gujarat Titans: 'சாம்பியன்களை உருவாக்கிய சாம்பியன்கள்'-இவங்களுக்கும் க்ரெடிட் கொடுங்க பாஸ்

Gujarat Titans: 'சாம்பியன்களை உருவாக்கிய சாம்பியன்கள்'-இவங்களுக்கும் க்ரெடிட் கொடுங்க பாஸ்

குஜராத், லக்னோ என இரண்டு அணிகள் மட்டுமே முதல் சீசனில் ஆடும் அறிமுக அணிகள். மற்ற அணிகள் எல்லாமே நல்ல அனுபவமிக்கவர்கள். இந்த இடத்திலிருந்து யோசிக்கும்போதுதான் குஜராத் அணியின் வெற்றிக்கு மூளையாக இருந்து உதவிய எல்லைக்கோட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த நபர்களையும் கொண்டாட வேண்டியிருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 15-வது ஐ.பி.எல் சீசனை வென்றிருக்கிறது. அறிமுக சீசனிலேயே அந்த அணி கோப்பையை வென்றிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. அணியை வழிநடத்திய 'கேப்டன்' ஹர்திக் பாண்ட்யா மற்றும் வெற்றிக்கு உதவிய பல வீரர்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றனர். குஜராத் அணியும் கேப்டனும் வீரர்களும்தான் இந்த சீசனை வென்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த வெற்றிக்கு அவர்கள் மட்டுமே க்ரெடிட் எடுத்துக்கொள்ள முடியாது. பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்தும் இந்த அணிக்காக பெரிய உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குமே நாம் க்ரெடிட் கொடுத்தாக வேண்டும்.

வெற்றியை தாண்டி அறிமுக சீசனிலேயே அந்த அணி சாதித்திருக்கிறது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. ஐ.பி.எல் இல் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமே இப்படி அறிமுக சீசனிலேயே வென்றிருக்கிறது. ஆனால், அதை இந்தளவுக்கான சாதனையாக குறிப்பிட முடியுமா என தெரியவில்லை. ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியனான அந்த சீசன்தான் ஐ.பி.எல் இன் அறிமுக சீசனும் கூட. இதனால் ராஜஸ்தானுக்கு மட்டுமில்லை எல்லா அணிகளுக்குமே அது அறிமுக சீசன்தான். எல்லா அணிகளுமே சம அளவிலான மட்டத்திலிருந்தே போட்டியிட்டிருந்தனர். ஆனால், இந்த சீசனில் குஜராத்திற்கு அப்படியில்லை. குஜராத், லக்னோ என இரண்டு அணிகள் மட்டுமே முதல் சீசனில் ஆடும் அறிமுக அணிகள். மற்ற அணிகள் எல்லாமே நல்ல அனுபவமிக்கவர்கள். இந்த இடத்திலிருந்து யோசிக்கும்போதுதான் குஜராத் அணியின் வெற்றிக்கு மூளையாக இருந்து உதவிய எல்லைக்கோட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த நபர்களையும் கொண்டாட வேண்டியிருக்கிறது.

பெங்களூருவில் மெகா ஏலம் நடந்த அரங்கில் தங்களுக்கான மேசையில் அமர்ந்த போது ஒவ்வொரு அணிக்குமே ஒரு பாரம்பரியமான ஸ்டைலும் கடந்த கால அனுபவங்களும் அதிலிருந்து கிடைத்த படிப்பினைகளும் அவர்களின் முன்னே இருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு வழிகாட்டும் கையேடு போன்றது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கான மேஜையில் தலைமை பயிற்சியாளராக நெஹ்ராவும் ஆலோசகராக கேரி கிறிஸ்டனும் இயக்குனராக விக்ரம் சொலாங்கியும் அமர்ந்திருந்தபோது அவர்களின் முன் எந்த வழிகாட்டும் கையேடும் இல்லை. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் மூவரின் கூட்டு திட்டமிடல் மட்டுமே அவர்களின் பலமாக இருந்தது. அதை வைத்துக் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் என்கிற அந்த பெயருக்கு உயிரை ஊட்டும் வகையில் ஒரு அணியை கட்டமைத்தனர். அந்த அணிதான் இப்போது முதல் சீசனிலேயே சாம்பியன் ஆகியிருக்கிறது.

இந்த சீசனின் தொடக்கத்தில் பெரிய அணிகளெல்லாம் தொடர்ந்து தோற்றபோது சில அணிகளின் பயிற்சியாளர்களே ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருந்தனர். அதாவது, 'இது மெகா ஏலத்திற்கு பிறகு நடக்கும் சீசன் என்பதால் நிறைய புதிய வீரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு 6-7 போட்டிகளுக்கு பிறகே அணிகள் ஒரு முழுமையை அடையும்' என பேசியிருந்தனர். நீண்ட காலமாக ஆடி வரும் அணிகளின் நிலையே இப்படித்தான் இருந்தது. ஆனால், குஜராத் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடியது. முதல் 3 போட்டிகளையுமே வென்றிருந்தது. வேறு எந்த அணியும் இவ்வளவு சிறப்பான தொடக்கத்தை பெற்றிருக்கவில்லை. ஆக, முதல் போட்டியிலிருந்தே இது ஒரு வெற்றிகரமான அணியாகவே இருந்தது. அப்படியெனில், வீரர்களின் பெர்ஃபார்மென்ஸூக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இந்த அணியை கட்டமைத்த மூளைகளுக்கும் கொடுத்தே ஆக வேண்டும்.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே தலைமை பயிற்சியாளராக இந்தியரை கொண்டிருக்கும் அணி வென்றிருப்பது இந்த சீசனில்தான். நெஹ்ரா ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்கு நீண்ட நெடுங்காலம் ஆடியிருக்கிறார். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐ.பி.எல் லிலுமே பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டிருக்கிறார். நெஹ்ரா அனுபவம் வாய்ந்த கிரிக்கெட்டராக இருந்தாலுமே கூட, அவர் மீது ஒரு மாபெரும் திறமைசாலி அல்லது புத்திக்கூர்மை மிக்கவர் எனும் பிம்பம் இருந்ததே இல்லை. கடுமையாக உழைப்பார். கிரிக்கெட்டை நேசிக்கக்கூடியவர் என்கிற அபிப்ராயம் மட்டும்தான் அவர் மீது இருந்தது.

ரசிகர்களுமே பல சமயங்களில் நெஹ்ராவை அதிகமாக ட்ரோல்தான் செய்திருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் 'ரசிகர்கள் உங்களிடம் அதிகம் விரும்புவது எதை?' என்பது போல ஒரு கேள்வி கேட்டப்பட்டது. 'அப்படி அந்தளவுக்கு விரும்பும் ரசிகர்களெல்லாம் எனக்கு இருப்பதாக தெரியவில்லையே' என்று நெஹ்ராவே வெளிப்படையாகவே பதில் கூறியிருப்பார். நெஹ்ராவின் மீதிருந்த மதிப்பீடை இதன் மூலம் புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த இரண்டு மாதங்கள் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. நெஹ்ராவை குறிப்பிட்டு அவரின் திட்டங்களை குறிப்பிட்டு ஐ.பி.எல் இன் மிகச்சிறந்த இந்திய பயிற்சியாளர் இவர்தான் என பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

2019 இல் பெங்களூரு அணியிலிருந்து வெளியேறியிருந்த சமயத்தில் நெஹ்ராவை பல அணிகளுமே தங்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் ஒப்பந்தம் செய்ய முயன்றனர். ஆனால், நெஹ்ராவுக்கு கடந்த கால படிப்பினைகளின்படி இந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஒரு தலைமையின் கீழ் கைகள் கட்டப்பட்ட நிலையில் வேலை செய்வதில் உடன்பாடில்லை. தலைமை பயிற்சியாளராக முழு அதிகாரத்தோடு ஒரு பதவி கிடைத்தால் மட்டுமே தான் நினைப்பதை முழுமையாக செயல்படுத்த முடியும் என நினைத்து காத்திருந்தார். அந்த சமயத்தில்தான் குஜராத் அணி அறிமுகமாகிறது. தலைமை பயிற்சியாளர் பொறுப்பு நெஹ்ராவை தேடி வந்தது.

பௌலர்களின் மீது அதிகமாக முதலீடு செய்திருந்த ஒரு சில அணிகளில் குஜராத்தும் ஒன்று. ஒரு வலுவான பந்துவீச்சு லைன் அப்பை உருவாக்கி, பௌலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணியாக உருவானதில் நெஹ்ராவின் பங்கு அதிகமாகவே இருந்தது. மற்ற அணிகளெல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு அதிக கோடிகளை கொடுத்து தக்கவைக்க, குஜராத் மட்டும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷீத்கான் இருவருக்கும் தலா 15 கோடியை கொடுத்து ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்திருந்தது. 'இது பேட்ஸ்மேன்களின் கேம்தான். ஆனால், பௌலர்களால்தான் வெற்றியை கொடுக்க முடியும்' என்ற புரிதல் கொண்ட கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருந்ததும் நெஹ்ராவிற்கு கூடுதல் பலமாக இருந்தது.

Director of Cricket ஆக விக்ரம் சொலாங்கி நியமிக்கப்பட்டிருந்தார். இவருமே நிரம்ப அனுபவமிக்கவரே. இவருமே முன்பு பெங்களூரு அணியுடன் இணைந்து துணை பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்தவர். முதல்தர போட்டிகளில் நல்ல ரெக்கார்ட் வைத்திருந்த பேட்ஸ்மேன். ஆனாலும், இங்கிலாந்து அணியில் கொஞ்ச காலமே அவரால் ஆட முடிந்தது. இங்கிலாந்து அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து முதல் தர போட்டிகளில் ஆடி வந்தார். சர்ரே அணியில் தொடர்ந்து ஆடியவர் அந்த அணிக்கே துணை பயிற்சியாளராக மாறினார். ஒரு கட்டத்தில் தலைமை பயிற்சியாளராகவும் மாறினார். பழமையான சர்ரே க்ளப்புக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தெற்காசியர் இவர்தான். இவர் அந்த அணியோடு இணைந்து பணியாற்றிய சமயத்தில் அந்த அணி கவுண்ட்டி சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தது. 2013 க்கு பிறகு 2020 கவுண்ட்டி அணிகளுக்கான Vitality T20 Blast தொடரில் சர்ரே அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இது விக்ரமின் மீது அதிக கவனத்தை திருப்பியது.

பல ஆண்டுகள் கழித்து அதுவும் இக்கட்டான கொரோனா சமயத்தில் அணியை சிறப்பாக கையாண்டு வெற்றிகளை குவிக்க செய்த விக்ரமை குஜராத் தங்கள் அணிக்குள் கொண்டு வந்தது. டி20 என்பது மேட்ச் வின்னர்களுக்கானது என்பது இவருடைய புரிதல். இதனால்தான் குஜராத் அணி மேட்ச் வின்னர்களாக தேடித்தேடி பிடித்து ஏலத்தில் வாங்கியது. ராகுல் திவேதியாவிற்கெல்லாம் 9 கோடி அதிகம் என விமர்சனங்கள் கிளம்பியிருந்தது. நியாயமான விமர்சனமும் கூடதான். அத்தனை கோடி கொடுக்குமளவுக்கு திவேதியா முழுமையான வீரர் கிடையாதுதான். ஆனால், அவரால் போட்டியை வென்று கொடுக்க முடியும். கடைசி இரண்டு பந்துக்கு இரண்டு சிக்சர்கள் அடிக்க வேண்டுமெனில் அதனை அவரால் செய்து காட்ட முடியும். அதற்குதான் அந்த 9 கோடி! ஃபார்மிலேயே இல்லாத டேவிட் மில்லர் கூட இந்த நம்பிக்கையில்தான் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அவர் ஃபார்மில் இல்லைதான். ஆனால், அவருக்கான நேரம் வந்துவிட்டதெனில் அவரை யாராலும் தடுக்க முடியாது. கில்லர் மில்லர் என்கிற அடைமொழியே அதனால்தானே வந்தது? இப்படியாக மேட்ச் வின்னர்களாக தேடிப்பிடித்து அணிக்குள் கொண்டு வந்ததில் அவர்களின் மீது அதிகமாக முதலீடு செய்ததில் விக்ரமின் பங்கு அதிகம் இருந்திருக்கக்கூடும்.


கடைசியாக கேரி கிரிஸ்டன். இவரைப் பற்றி தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இந்தியர்கள் அனைவருக்குமே தெரிந்த முகம்தான். 2011 உலகக்கோப்பையில் தோனி மைதானத்தில் சிக்சர் அடிக்க, ட்ரெஸ்ஸிங் ரூமில் ஸ்கெட்ச் போட்ட பயிற்சியாளர். பயிற்சியாளராக மாபெரும் வெற்றியோடு நீண்ட அனுபவத்தை கொண்டவர் என்பதால் இவரை ஆலோசகராக நியமித்திருந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு முக்கியமான கட்டங்களில் தனது அறிவுரைகளை கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தார். பேட்டிங் பயிற்சியாளரும் கூட என்பதால் ஒரு பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்ட்யா இந்த முறை ஒரு தலைகீழ் முயற்சியில் இறங்கியிருந்தார். ஃபினிஷராக ஆடியவர், நம்பர் 4 க்கு ப்ரமோட் ஆகியிருந்தார். இந்த மாற்றம் வெற்றிகரமானதாக மாறியதில் கேரி கிறிஸ்டனின் பங்கு அதிகமாகவே இருந்தது. 'ஹர்திக் பாண்ட்யா பெரும் திறமைசாலி, அவரால் எங்கே வேண்டுமானாலும் ஆட முடியும். இந்த நம்பர் 4 லும் ஆட முடியும்' என்பதை தொடக்கத்திலிருந்தே பெரும் நம்பிக்கையோடு குறிப்பிட்டு வந்தார். அந்த நம்பிக்கையை ஹர்திக்கும் காப்பாற்றியிருந்தார்.

களத்தில் இறங்கி ஆடிய அந்த 11 பேர் மட்டுமில்லை. அவர்களுக்காக எல்லைக்கோட்டிற்கு வெளியே உட்கார்ந்து உழைப்பை கொட்டிய இவர்களுமே கூட சாம்பியன்கள்தான்!

-உ . ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com