ஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்
ஆஷஸ் தொடருக்கு பின்பு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் 329 ரன்கள் குவித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்தது.
நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வேட் 117 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 2- 2 என்ற கணக்கில் சமன் செய்தது. எனினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருந்ததால் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,“இது ஆஷஸ் தொடரில் எப்போதும் நடப்பது. ஆடுகளத்தில் கடும் போட்டி நிலவினாலும், இரு அணி வீரர்களுக்கும் இடையில் எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு” எனக் கூறி ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளனர்.