“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..!

“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..!
“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..!

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த அரையிறுதிப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. அப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாறினார். பின்னர் ஜடேஜா மற்றும் தோனி ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

எனினும் தோனி 50 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அதன்பிறகு இந்தியா 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வந்தாலும், அவரது தலைமையில் இந்திய அணி அடைந்த முக்கியமான தோல்வி இதுதான். 

உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிப் பெற்றது சாதனைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் இந்தியா டூடே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், “எல்லோரையும் போல் நானும் தோல்வியினால் அவதிப்படுவது உண்டு. அவ்வாறுதான் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி தோல்வியின்போது நான் மிகவும் அவதிப்பட்டேன். அந்தப் போட்டியின் தொடக்கத்தில் நான் எப்படியாவது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வேன் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. ஆனால் அது நடக்கவில்லை. 

எனக்கு எப்போதுமே தோற்பது பிடிக்காது. ஆடுகளத்திற்கு வெளியே வந்த பிறகு அப்படி செய்திருக்கலாமே அல்லது இப்படி செய்திருக்கலாமே என்று கூறுவது எனக்கு பிடிக்காது. நான் எப்போதும் களமிறங்குவதை ஒரு பெருமையாக நினைப்பேன். அதேபோல வெளியே வரும்போது என்னுடைய மொத்த சக்தியை கொடுத்துவிட்டுதான் வரவேண்டும் என நினைப்பவன். நாங்கள் விளையாடிய விதத்தை பார்த்து இனிமேல் வருபவர்கள் இவர்கள்போல விளையாட வேண்டும் என்று சொல்ல வேண்டும். அத்தகைய விளையாட்டை தான் நாங்கள் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com