“தோற்றது பிரச்னை இல்லை.. எப்படி தோற்றோமென்பதே பிரச்னை” - மனம்திறந்த நியூஸி. கேப்டன்
இரண்டு போட்டிகளில் தோற்றது பெரிய பிரச்னை அல்ல, ஆனால் எப்படி தோற்றுள்ளோம் என்பது தான் பிரச்னையாக உள்ளதென நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இரண்டாது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது தொடர்பாக பேசிய வில்லியம்சன், “இது சிறு ஏமாற்றம் தான். பெரிய அளவிலான தோல்வியை அடையவில்லை. தோற்றது பிரச்னை இல்லை. ஆனால் எப்படி தோற்றோம் என்பதே பிரச்னையாக உள்ளது. இந்தியாவை பாராட்டியே ஆக வேண்டும். இரு அணிகளிலும் ஆட்டத்தில் அதிக வித்தியாசங்கள் உண்டு. இரண்டிலும் அவர்கள் சிறப்பாகவும், இரண்டிலும் எங்கள் அணி சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமலும் இருந்துள்ளோம்.
குறிப்பிட்ட கட்டத்தில் போட்டி எங்கள் கையை மீறி போய்விட்டது. 324 என்பது ஒரு நல்ல இலக்கு. அதை எதிர்த்து அடித்திருக்கலாம். அதேசமயம் 320 என்ற ரன்களுக்குள் இந்தியாவை எங்கள் பவுலர்கள் கட்டுப்படுத்தியிருக்கலாம். தொடக்கத்திலேயே முடிவை எண்ணமால், சிறிய சிறிய படிகளாக எடுத்து வைக்க வேண்டும். விக்கெட்டுகளின் இழப்பு எங்களின் இலக்கை கடினமாக்கிவிட்டது. விக்கெட்டுகள் கையில் இருந்தால், இலக்கு எளிதாக தெரிந்திருக்கும். ஆனால் விக்கெட்டுகள் எங்களிடம் கையில் இல்லை. இதன்பிறகு விக்கெட்டை பறிகொடுக்கக்கூடாது என்ற பாடத்தை நாங்கள் புரிந்துகொண்டோம்” என்றார்.
முன்னதாக, இந்தியா-நியூஸிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா 87 (96), ஷிகர் தவான் 66 (67), தோனி 48 (33), அம்பத்தி ராயுடு 47 (49), விராட் கோலி 43 (45) ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.

