”நீங்கள் ஸ்லிம்மான வீரர்களை விரும்பினால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” - கவாஸ்கர் சாடல்

”நீங்கள் ஸ்லிம்மான வீரர்களை விரும்பினால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” - கவாஸ்கர் சாடல்
”நீங்கள் ஸ்லிம்மான வீரர்களை விரும்பினால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” - கவாஸ்கர் சாடல்

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கானை தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்த காரணத்திற்காக, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழுவை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியை அடுத்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி, இந்திய ஆடுகளங்களில் மோதுவதால் இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் எந்த இடையூறும் இல்லாமல் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இந்தியா பெறும் என்பதால், டெஸ்ட் போட்டிகளும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஏமாற்றமளித்த தேர்வு குழு!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய தலைமைத்தேர்வு குழு. அணி தேர்வின் பட்டியலில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான் மற்றும் ஏற்கனவே அணிக்குள் எடுக்கப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன் முதலிய வீரர்கள் எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலாக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் அணிக்குள் எடுக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து 3 ரஞ்சிக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் சர்ஃபராஸ் கானை அணிக்குள் கொண்டுவராதது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளித்தது.

டெஸ்ட் அணியிலும் டி20 வீரர்கள் என்றால் எதற்கு ரஞ்சிக்கோப்பை?

இந்திய அணி தேர்வுக்குழுவின் செயலால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நியாயமான சில கேள்விகளை முன்வைத்தனர். அதில் ரசிகர் ஒருவர், "டெஸ்டில் சர்பராஸ் கானை விட்டுவிட்டு சூர்யகுமார் யாதவை தேர்வு செய்திருப்பது ரஞ்சி கோப்பையை அவமதிப்பதாகும். பின்னர் எதற்காக ரஞ்சிக்கோப்பையை நடத்த வேண்டும்? சர்பராஸ் மிக சிறப்பான முதல் தர ரன்களையும், ஆட்டத்தையும் வைத்திருக்கிறார். எந்த வீரரை விடவும் அவர் டெஸ்ட் அணிக்குள் தகுதியான வீரர். இந்த இந்திய அணியின் தேர்வு குழுவும் குழப்ப குழுவாக உள்ளது” விமர்சித்திருந்தார்.

மற்றொரு ரசிகர் கூறும்போது, “டி20 ஆட்டத்தை பொறுத்து நீங்கள் டெஸ்ட் அணியை தேர்வு செய்தால், டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடும் புஜாராவையும் டி20 அணியில் விளையாட வையுங்கள்” என்று விமர்சித்திருந்தார்.

ஒரு வீரர் இதற்கு மேல் என்ன செய்யமுடியும்! சர்பராஸ்கானை ஏமாற்றிவிட்டார்கள்!

சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்திருந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, “முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தேர்வு குழு கதவை தட்டியிருக்கும் சர்பராஸ் கானிற்கு இது கடினமான ஒன்று. இதைவிட அணிக்குள் நுழைய சிறப்பான பங்களிப்பை கொடுக்கமுடியாது. ஒரு வீரர் வேறு என்னதான் செய்ய வேண்டும் ” என்று தெரிவித்திருந்தார்.

இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, “ அணியில் தேர்வு செய்யப்படாதது சர்ஃபராஸ் கான் ஏமாற்றப்பட்டுவிட்டார் என்பதை தான் குறிக்கிறது. சூர்யகுமாரை எடுத்துள்ளீர்கள் என்றால் அணியில் ஒரு இடம் காலியாக இருக்கிறது என்று தானே அர்த்தம். டான் பிராட்மேனுக்கு பிறகு முதல் தர போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரராக இருக்கும் அவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் சூர்யகுமாரா இல்லை சர்ஃபராஸ் கானா என்று கேட்டால் நான் டெஸ்ட் போட்டிகளில் சர்ஃபராஸ் கானை தான் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

நானும் மனுசன் தான், என்னால அந்த ராத்திரி முழுக்க தூங்க முடியவில்லை!-சர்ஃபராஸ் கான்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்காதது பற்றி பேசியிருந்த சர்பராஸ் கான், ” நானும் மனிதன் தான், எனக்கும் உணர்வுகள் இருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் நான் உடைந்திருந்தேன், என்னால் உறங்க முடியவில்லை. ஆம் நான் அழுதேன், பிறகு என் தந்தையை நான் அழைத்தேன், அவர் என்னிடம் நிறைய பேசினார், இப்போது என்னை வெளிக்கொணர்ந்துவிட்டேன், இனி அழுத்தமான மனநிலைக்கு செல்லமாட்டேன், என்னுடைய ரன்கள் இனி நிற்கவும் செய்யாது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவருடைய முதல்தர ரன்களையும், ஸ்டேட்ஸ்களையும் சர்பராஸ் கான் தன் இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஜாம்வான் கிரிக்கெட்டரான முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், சர்ஃபராஸ் கானை தேர்ந்தெடுக்காத இந்திய அணியின் தேர்வுகுழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உங்களுக்கு ஸ்லிம்மான தோற்றமளிக்கும் வீரர்கள் தான் வேண்டுமென்றால், ஃபேஷன் ஷோவிற்கு சென்று மாடல்களை தேர்ந்தெடுங்கள்!

சர்ஃபராஸ் கான் எடுக்கப்படாததற்கு கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கும் சுனில் கவாஸ்கர், “ சதங்கள் அடிக்கும் போது அவர் களத்திற்கு வெளியே நின்று அடிக்கவில்லை, களத்திற்குள் இருந்து தான் அவர் அதை செய்தார். அவர் மீண்டும் மீண்டும் ரன்களை குவித்துக்கொண்டிருப்பது, அவர் இந்திய அணிக்குள் இருக்க தகுதியானவர் என்று உங்களுக்கு சொல்லவில்லையா. நீங்கள் ஸ்லிம்மான மற்றும் சிறந்த தோற்றமுள்ள வீரர்களை மட்டுமே தேடுகிறீர்கள் என்றால், அப்போது நீங்கள் ஃபேஷன் ஷோவிற்குச் செல்லுங்கள், அங்கு சென்று சில மாடல்களைத் தேர்ந்தெடுத்து, பிறகு அவர்கள் கையில் ஒரு பேட் மற்றும் பந்தைக் கொடுத்து அவர்களைச் அணிக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கடுமையான விமர்சனத்தால் சாடியுள்ளார்.

மேலும், ” உங்களிடம் எல்லா வடிவங்களிலும் தோற்றங்களிலும் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். தோற்றத்தைப் பார்க்க வேண்டாம், ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுப்பதை மட்டும் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சர்பராஸ் கான்!

2019ஆம் வருடத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷர்பராஸ் கான், 22 போட்டிகளில் 134 சராசரியுடன் 2289 ரன்களை குவித்துள்ளார். 3 முறை இரட்டை சதங்களை விளாசி இருக்கும் ஷர்பராஸ், ஒருமுறை 300 ரன்களையும் குவித்துள்ளார். மற்றும் 9 சதங்களுடன் 5 அரைசதங்களை அடித்துள்ளார் ஷர்பராஸ். அதிகபட்ச ரன்களாக 301* ரன்களை குவித்துள்ளார். மேலும் அணித்தேர்வு மறுக்கப்பட்ட அடுத்த போட்டியில் தற்போது மற்றொருமொரு சதத்தை எடுத்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தேர்வை தான் தற்போது, தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் இருப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவாகவே அடுத்த போட்டிகளுக்கான அணியை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு அறிவிக்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com