'மன்னிச்சிடுங்க எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி

'மன்னிச்சிடுங்க எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி
'மன்னிச்சிடுங்க எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவதில் புகழ்ப்பெற்றவர். இந்திய அணிக்கு கோலி அறிமுகமான புதியதில் இவர் ஆக்ரோஷப் போக்கு பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. எதிர் அணி வீரர்களை சீண்டுவது, அவர்கள் ஏதேனும் சொன்னால் பதிலடி கொடுப்பது. தகாத வார்த்தைகளில் எதிரணி வீரர்களை சீண்டுவது என பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்தவர் விராத் கோலி.

ஆனால் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு, ஆக்ரோஷம் குறையவில்லை என்றாலும் பல வெற்றிகளை குவித்தார். இப்போது உலகளவில் மிக முக்கியமான பேட்ஸ்மேன்களில் கோலியும் ஒருவர். இப்போது கோலிக்கும் கட்டம் சரியில்லை என்றாலும் இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற 7 ஆம் தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு சில நாள்கள் இருக்கும் நிலையில் கோலி இங்கிலாந்து ஊடகத்துக்கு மனம் திறந்த பேட்டியொன்றை கொடுத்துள்ளார் அதில் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் "2012 இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தோம். சிட்னியில் நடைபெற்றப் போட்டியில் நான் பவுண்டரி அருகே பீல்டிங் செய்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் என்னை தகாத வார்த்தைகளில் சீண்டிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் என் நடுவிரலை காட்டினேன்".

"பின்பு மறுநாள் போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே என்னை அவரின் அறைக்கு அழைத்தார். என்னிடம் நேற்று பவுண்டரி அருகே என்ன நடந்தது என கேட்டார், நான் ஒன்றுமில்லை என சொன்னேன். அப்போது நாளிதழை என் முன்னே காட்டினார் அதில் நான் ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய புகைப்படம் பெரிதாக வெளியாகி இருந்தது. நான் பதறிவிட்டேன். உடனே, ரஞ்சன் மதுகலேவிடம் என்னை மன்னித்து விடுங்கள் தெரியாமல் செய்துவிட்டேன். என்னை போட்டியில் விளையாட தடை விதித்துவிடாதீர்கள் என கெஞ்சினேன். அதிர்ஷ்டவசமாக நான் அவரால் தண்டிக்கப்படவில்லை. ரஞ்சன் மிகவும் நல்ல மனிதர்" என தெரிவித்துள்ளார் கோலி.

மேலும் தன் பழைய நினைவுகளில் மூழ்கிய கோலி "நான் என் கடந்த காலத்தை நினைத்து பார்க்கும்போது மிகவும் சிரிப்பாக இருக்கும். நான் எவ்வளவு தவறு செய்திருக்கிறேன், என் தவறுகளை ஏற்று மன்னித்தவர்களால்தான் என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடிந்தது. ஆசிரியர் தினம் என்பதால் என்னுடைய முதல் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவை நினைவுக் கூறுகிறேன். ஒரு தந்தையைப் போல என்னை அவர் வழிநடத்தினார், இப்போதுள்ள இளைஞர்கள் தவறு செய்கின்றனர் ஆனால் அந்தத் தவறு ஒரு முறைக்கு மேல் இருக்கக் கூடாது. தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்கையில் முன்னேற வேண்டும். இளமை பகுதி வாழ்கையை மாற்றியமைக்கும் முக்கியமான கட்டம் என்பதை மறக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார் கோலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com