’படிச்சவங்க இப்படி பேசுவாங்களா?’’ காம்பீரை மீண்டும் சீண்டிய அப்ரிதி
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற கவுதம் காம்பீரின் ஆலோசனையை ஷாகித் அப்ரிதி விமர்சித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். இவர், இப்போது பாஜக சார்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்திய அணி தவிர்க்க வேண்டும். இறுதிப் போட்டியாக இருந் தாலும் கூட இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காம்பீரின் இந்தப் பேட்டி குறித்து பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதியிடம், செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்கு பதிலளித்த அப்ரிதி, ’’காம்பீர், இதுபோன்று பேசும்போது தனது புத்தியை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறீர்களா? படித்தவர்கள் இப்படி பேசுவார்களா?’’ என்று கேட்டுள்ளார்.
ஏற்கனவே இருவருக்கும் வாய்க்கா, வரப்பு பஞ்சாயத்து. இவர் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல என்று அவ்வப்போது தொடர்ந்து கொண்டி ருக்கிறது, வார்த்தை போர். இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.