“உலகின் சிறந்த ஸ்பின்னர்கள் ஆப்கான் வீரர்கள் தான்” - பாக்.கேப்டன் பாராட்டு
உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தான் என கருதுவதாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. இலங்கை ஆப்கானிஸ்தானிடம் தோற்று வெளியேறியது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆப்கான் பலம் என்று கூறுவதை விட இலங்கை மிகவும் பலவீனம் என தான் கூறவேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த வெற்றியின் பலன் முழுவதுமாக ஆப்கானை சென்று சேரவில்லை.
இதைத்தொடர்ந்து தகுதிச்சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இதன்பிறகு ஆப்கானிஸ்தான் மீது கவனம் அதிகரித்தது. அந்த அணி எளிமையாக வங்கதேசத்தை வீழ்த்தியது சற்று ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுடம் மோதியது. 257 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் குவித்தது. அதை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் கடைசி வரை வாழ்வா? சாவா? என்றே நிலையில் இருந்தது. இறுதியில் சொயப் மாலிக்கின் அனுபவம் வாய்ந்த பேட்டிங் பாகிஸ்தானிற்கு வெற்றியை பெற்றுத்தந்தது. அவர் இறுதிவரை நிலைத்து விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அனுபவம் குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத், “ஆப்கானிஸ்தானுடன் விளையாடியபோது எங்கள் அணியே ஆட்டம் கண்டுவிட்டது. இமாம் மற்றும் சொயப் சிறப்பாக விளையாடினர். ஆப்கானிஸ்தானை எதிர்த்து 250க்கு மேல் அடித்ததை சிறந்த பேட்டிங் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் அங்குதான் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஆஸ்கர் ஆப்கான் கூறும்போது, “சொயப் மாலிக் போன்ற சீனியர் வீரரை எதிர்த்து விளையாடியது கடினமானது. அதேசமயம் பாபர் மற்றும் இமாமும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். எங்களிடம் ஃபீல்டிங் சற்று சரியில்லை. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்களும் திறம்பட விளையாடவில்லை” என்றார்.