திருப்பாவை, திருவெம்பாவை
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி நாள் 4: திருப்பாவை திருவெம்பாவை 4 வது பதிகம்; அதன் விளக்கம்

மார்கழி நான்காம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள், தானும் தனது தோழிகளும், ஊர் மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி பாவை நோன்பு நூர்ப்பதற்காக தோழிகளை எழுப்பி மழையை வேண்டுகிறார்.
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.

அதன்படி நான்காம் நாளான இன்றும் இரு பாடல்கள் மற்றும் அதன் பொருட்களை பார்க்கலாம்...

மார்கழி நான்காம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள், தானும் தனது தோழிகளும், ஊர் மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி பாவை நோன்பு நூர்ப்பதற்காக தோழிகளை எழுப்பியவள், பின்பு அனைவரும் நீராடுவதற்கு நீர் நிலைகள் நிரம்புவதற்கு மழையை வேண்டிக்கொள்கிறார்.

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்

ஆழியில் புக்கு, முகந்து, கொடு, ஆர்த்து ஏறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

பாழி அம் தோளுடை பத்ம நாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

என்கிறார். இந்த பதிகத்தில் ஆண்டாள் மழையின் சிறப்பை எடுத்து விளக்குகிறார். மழையுடைய சிறப்பை, மாலனுடைய சிறப்பாய் விளக்கும் உன்னதப் பதிகம்.

மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! (மழைத் தேவன்) நாங்கள் சொல்வதைக் கேள். நாங்கள் நீராட வேண்டும் ஆகையால், கடல் நீர் முழுவதையும் நீ முகர்ந்து மேலே கொண்டு சென்று உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் நீயும் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் நீ மின்னலை வீசி, வலம்புரி சங்கு எப்படி இடிபோல் ஒலிக்குமோ அது போல இடி ஒலியெழுப்பி, கண்ணனது சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்டு வெற்றியை மட்டுமே கொடுக்கும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. அப்பொழுதுதான் மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச்செய்யும்” என்று கூறுகிறார்.

மார்கழி நாலாவது நாளான இன்று திருவெம்பாவை பதிகத்தைப்பார்க்கலாம். இங்கும் சிவபெருமானை தரிசிக்க தோழியர்கள் தங்கள் தோழியை எழுப்புகின்றனர். இதைமாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பதிகமாய் இயற்றியுள்ளார்

திருவெம்பாவை பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்

தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

இரு தோழிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலின் தொடர்ச்சி... “ முத்துக்கள் எப்படி இருளிலும் பிரகாசமாய் இருக்குமோ, அது போல பற்களைக்கொண்டு சிரிக்கும் தோழியே... உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா?” என்ற தோழியைப்பார்த்து,

“பச்சைக்கிளிப்போல் பேசும் தோழிகள் உங்களுடன் வந்து விட்டார்களா..?” என்று வினா எழுப்புகிறாள்.

”அடியேய்... உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனைப்பேர் என்று இனிமேல்தான் பார்க்கவேண்டும் அதில் நீ கூறிய தோழிகள் இருக்கிறார்களா என்பதை தேடவேண்டும். ஆனால், தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை தேடிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com