
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவரான மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கடந்த 22-ஆம் தேதி கருட சேவை நடந்து முடிந்த நிலையில், பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ரதோற்சவம் எனப்படும் மகா ரதத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
இதையடுத்து பக்தர்கள் 'கோவிந்தா', 'கோவிந்தா' என விண்ணதிர கோஷமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்து வருகிறார். ரத உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.