\
Tirupati
Tirupati Tirupati

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. செப்டம்பரில் இந்த சேவைகள் ரத்து!

புரட்டாசி மாத பிரம்மோற்சவம் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகள் பெற்றோர், வெளிநாட்டு இந்தியர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோரின் விஐபி தரிசனங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
Published on
Summary

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 23 வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 15 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ நாட்களை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவம் மிக முக்கிய மற்றும் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவை முதன்முதலில் பிரம்ம தேவர் நடத்தியதாக ஐதீகம் உள்ளதால், இது 'பிரம்மோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது.  ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் 5ஆம் நாள் நடக்கும் கருட சேவை ரொம்பவே விஷேசமானது. அன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோயிலில் ஒன்றுகூடி ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.. 

Tirupati Devotees
திருப்பதிகோப்புப் படம்

விழாவின் நிறைவு நாளில் தீர்த்தவாரியுடன் சக்கரத்தாழ்வாருக்கு நீராட்டு விழா நடந்து பிரம்மோற்சவம் நிறைவடையும். பிரம்மா முதன்முதலில் இந்த விழாவை நடத்தி திருமால் அருள் பெற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.. இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு (2026) எப்போது நடக்கப் போகிறது.. அதனால் என்னென்ன சேவைகள் ரத்து செய்யப்படுகிறது உள்ளிட்ட பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…

திருப்பதியில் பிரம்மோற்சவம் எப்போது 2026

திருப்பதி
திருப்பதிமுகநூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த வருடம் 2 பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. அதோடு நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி  வரை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படவுள்ளது. 

திருப்பதியில் பிரம்மோற்சவ 2026 விழாவின் நிகழ்வுகள்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 14 அன்று வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம் என்ற தொடக்க கால பூஜைகளும் செப்டம்பர் 15ல், கொடியேற்றத்துடன் விழா அதிகாரப்பூர்வமாகவும் தொடங்குகிறது. செப்டம்பர் 19ல் விழாவின் முக்கிய நிகழ்வான பிரம்மாண்ட கருட சேவை மாலை 6:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை நடைபெறும். செப்டம்பர் 20ல் தங்க தேரோட்டம் மற்றும் கஜ வாகனம். செப்டம்பர் 23ஆம் தேதி புனித தீர்த்தவாரி எனப்படும் சக்கரஸ்நானத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.

பிரம்மோற்சவ நாட்களை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளின் பெற்றோர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது என்றும் நேரடியாக வரும் விஐபி பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.. 

ஏன் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சம்?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவங்கள் நடப்பது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் நடப்பது வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று தொடங்கி 20ஆம் தேதி வரை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படவுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com