மார்கழி 2ம் நாள் | ஆண்டாள் விளக்கும் பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்...!
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.
அதன்படி இரண்டாம் நாளான இன்றும் இரு பாடல்கள் மற்றும் அதன் பொருட்களை பார்க்கலாம்...
திருப்பாவையில் இருந்து, பாடல் 2
இந்த பாசுரத்தில் ஆண்டாள் தனது தோழிகளை எப்படி பாவை நோன்பு விரதம் இருப்பது என்று விளக்கமாக கூறியுள்ளார்.
பாடல் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;
நாட்காலை நீராடிமையிட் டெழுதோம்;
மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
இதன் பொருள் என்னெவென்றால்,
“தோழிகளே.. பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் பரந்தாமனை நாம் அடைவதற்கு வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையை சொல்கிறேன் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்..” என்பதாகும்.
இதில் நெய், பால், கண்ணில் மை, கூந்தலில் மலர் இதெல்லாம் கூடாது என்று ஏன் சொல்கிறார் என்றால், விரதத்திற்கு என்று ஒரு முறை உண்டு. ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டினால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதே போல் மார்கழி மாதம் பூக்கின்ற அனைத்துப்பூக்களும் கண்ணனுக்கே உரியது என்பதால், ஆண்டாள் தனது தோழிகளிடத்தில் இப்படிக்கூறியதாக சொல்லப்படுகிறது.
திருவெம்பாவையில் இருந்து, பாடல் 2
அடுத்ததாக திருவெம்பாவை பாடல் 2. மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியால்
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
என்ற பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடலில், தோழி ஒருத்தி மற்றொரு தோழியை அதிகாலை வேளையில் திருவண்ணாமலையை வலம் வரும் சிவபெருமானை தரிசித்து அவரின் ஆசியை பெற வேண்டி எழுப்புகிறார்.
இதன் விளக்கம்,
"அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது ‘ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய்’ என்கிறார் தோழி ஒருத்தி.
அதற்கு, உறங்குபவள் எழுந்து ‘தோழியே...! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது?’ என்றாள்.
அவளுக்கு பதிலளித்த பிற தோழியர் ‘கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக’ என்றனர்” என்பதாகும்.