கோவில்
கோவில்கூகுள்

மார்கழி முதல் நாள்... திருப்பாவை திருவெம்பாவை - தலா 1 பாடலும், விளக்கமும்!

மார்கழி மாதத்தில், திருப்பாவை வைணவத் தலங்களிலும், திருவெம்பாவை சிவ தலங்களிலும் அதிகாலை வேளைகளில் பாடப்படுகிறது. இவை இரண்டிலும், தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் இன்று நாம் பார்க்கலாம்.
Published on

மார்கழி என்றாலே கடவுளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதனாலேயே இந்த மாதத்தில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சைவ, வைணவ ஸ்தலங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த மாதத்தில் நோன்பு இருந்து கடவுளை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பதை ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை இரண்டின் மூலமாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

இதை குறிப்பிடும் வகையிலேயே திருப்பாவை வைணவத்தலங்களிலும், திருவெம்பாவை சிவஸ்தலங்களிலும் அதிகாலை வேளைகளில் பாடப்படுகிறது. இதில் முதல் பாடல்களை அதன் பொருளை இன்று நாம் பார்க்கலாம்.

திருப்பாவை

ஆண்டாள் கண்ணனை அடைய விரும்பி மார்கழி மாதம் 30 நாட்களும், தனது தோழிகளுடன் சேர்ந்து கண்ணனை நினைத்து பாசுரங்கள் பாடி, விரதமிருந்து இறுதியில் தான் நினைத்தப்படி கண்ணனை அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன (ஆண்டாள் திருப்பாவைத்தவிற நாச்சியார் திருவாய்மொழி என்ற நூலையும் இயற்றியுள்ளார் என்பது கூடுதல் தகவல்)

இதில் மார்கழியின் முதல் நாளான இன்று ஒரு திருப்பாவை பாடலையும், அதன் விளக்கத்தையும் தெரிந்துக்கொள்வோம்.

கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்து இருப்பார் என்பதற்கு இணங்க.. ஆண்டாள் தனது சிறுவயதில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தபடி கண்ணனை நினைத்து,

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

என்கிறார். இதன் பொருள்:

“தோழிகளே... அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியர்களே... சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இன்று. ஆகையால் பொழுது புலர்வதற்குள் நாம் நீராடலாம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்” என்கிறார்.

இந்த பாசுரத்தை ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து பாடினாலும் தனது மனதில் வைகுண்டத்தை நினைத்துக் கொண்டு பாட்டை இயற்றி இருக்கிறார். அதனால்தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திவ்யதேசத்தில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திவ்யதேசமான வைகுண்டத்தில்தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே வைகுண்டத்தை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்” என்கிறார்.

திருவெம்பாவை..

இது மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது. ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.

இன்று நாம் அறியும் பாடல் 1:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

இதன் பொருள்:

“திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.

இதனால் ‘பெண்ணே... துவக்கம் - இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே! உன் காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டனவா? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள் அத்தகைய பக்திக்கொண்ட அந்த பெண் இருக்க... நீ இன்னும் துயிலெழாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறாயே... நீயும் சிவபெருமானை நினைத்து பாட எழுந்து வருவாயாக...’ “ என்கிறார்.

அடுத்தடுத்த நாட்களில், ஒவ்வொரு பாடலையும் விளக்கத்துடன் அறிவோம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com