
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தன. இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஸ்ரீ செண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடியபடி திருத்தேருக்கு எழுந்தருளினார். அதிகாலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு செண்பக தியாகராஜர், பிரணாம்பாள், விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் என அடுத்தடுத்து ஐந்து கடவுள்களும் பிரம்மாண்ட தேர்களில் எழுந்தருள, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து 'நள்ளாறா தியாகேசா' என்ற முழக்கங்களுடன் தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.