
உலகம் முழுவதும் எண்ணற்ற பெருமாள் கோவில்களில் இருந்தபோதிலும், 108 திவ்ய தேசங்கள் மிகவும் சிறப்புடையவை. இந்த 108 பெருமாள் கோவில்களில் இந்தியாவில் 105 உள்ளன. நேபாளத்தில் ஒரு கோவிலும், மீதமுள்ள இரண்டு கோவில்கள் விண்ணுலகிலும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் மட்டுமே 80-க்கும் அதிகமாக திவ்ய தேசங்கள் உள்ளன. திவ்ய தேசங்களிலேயே முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பற்றி கடந்த தொகுப்பில் பார்த்தோம். இந்த தொகுப்பில் இரண்டாவதாக உள்ள உறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) கோவில் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் நாம் பார்க்கலாம்.
”கோழியும் கூடலும் கோவில் கொண்ட கோவலரே ஒப்பர்.. குன்னமண்ன..”
என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ஒரு பாசுரம் உள்ளது.
அதென்ன கோழி..? கோழி என்றால் உறையூர். இப்பெயர் வருவதற்கு புராணத்தில் ஒரு கதையும் உள்ளது. ஒருமுறை சோழநாட்டு அரசரின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து உறையூரில் நுழைந்து ஊரை துவம்சம் செய்து வந்தது. யானையை எப்படி அடக்குவது என்று தெரியாமல் மக்கள் திணறிய சமயம் அவ்வூரின் சிவன்கோவிலில் இருந்த கோழிக்கு ருத்திரனின் சக்தி கிடைக்கப்பெற்று அது, யானையுடன் சண்டையிட்டு யானையை விரட்டி அடித்ததாம். அதனால் இவ்வூரை கோழி என்று பாசுரத்தில் பாடப் பட்டுள்ளது.
சரி, இதற்கு ஏன் உறையூர் என்று பெயர் வந்தது தெரியுமா?...
நாச்சியார் வாழ்ந்த ஊர் என்பதால் இதற்கு உறையூர் என்ற பெயர் ஏற்பட்டது.
யார் அந்த நாச்சியார்?... இதற்கும் புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.
சோழநாட்டை சேர்ந்த, நத்த சோழன் என்ற அரசன் தீவிர பக்தன். இவன் உறையூரில் இருந்த படி ஸ்ரீரங்கத்திற்கு பல திருப்பணிகளை செய்து வந்தான். ஆனால், இவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு நாள் அவன் வேட்டையாடுவதற்கு காட்டுக்குச் சென்றான். அச்சமயம் அக்காட்டின் மத்தியில் ஒரு தாமரை தடாகம் ஒன்றில் ஆயிரம் இதழ்களுடன் இருந்த ஒரு தாமரை மலரில் அழகான பெண் குழந்தை ஒன்று இருந்ததை அவன் கண்டான். கடவுள் நமக்காக தந்த குழந்தை இது, என்று நினைத்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான். தாமரையில் அக்குழந்தையை பார்த்ததால், குழந்தைக்கு கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். இவள்தான் பின்னாளில் ரெங்கநாதரை விவாகம் செய்துக்கொண்டு கமலவல்லி நாச்சியார் ஆனாள்.
கோவிலின் சிறப்பம்சம்:
இக்கோவில் ஸ்ரீரங்கத்தை நோக்கி வடக்குதிசை பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் மேற்கு பகுதியில் உறையூர் நாச்சியார் கல்யாணத் திருக்கோலத்திலும், கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் கற்பக விருக்ஷத்தின் அடியில் ஸ்ரீரங்கநாதனும் கமலவல்லியும் விவாகம் செய்துகொண்டு முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு காட்சிதரும் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
கமலவள்ளி நாச்சியாரை, ரெங்கநாதர் திருக்கல்யாணம் செய்து கொண்ட இந்த வைபவமானது ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் 6 ம் நாள் வெகுசிறப்பாக நடந்து வருகிறது. இத்தலத்தில் ரெங்கநாதர் அழகிய மணாவாளனாக நாச்சியாருடன் வடக்கு திசை நோக்கி அருள் பாலித்து வருகிறார்கள். ஆழ்வார்களில் 11வது ஆழ்வாரான திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்த பெருமையும், திருமங்கையாழ்வாரால் பல்லாண்டு பாடப்பட்ட சிறப்பையும் உறையூர் ஆலயம் பெற்றுள்ளது.
இத்திருத்தலம் திருமணத்தடை நீங்கவும் பிரிந்த தம்பதியர் சேரும், பிரார்த்தனை தலம் என்று நம்பப்படுகிறது. இத்திருக்கோயிலில் நாச்சியார் சன்னதியை தவிர, கருடன் சந்நிதி, நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.