”காந்தாரியின் சாபம் ஒன்று போதாதா, இதில் விஸ்வாமித்திரர் வேறா?” - கிருஷ்ணரின் குலமே அழிந்தது எப்படி?

விஸ்வாமித்திரரின் சாபத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கவும், கிருஷ்ணரும், காந்தாரி சாபம் ஒன்று போதாதென்று விஸ்வாமித்திரரின் சாபம் வேறா? என்று நினைத்தவர், அந்த இரும்பு உலக்கையை பொடிப்பொடியாக்கி அதை கடலில் கரைத்து விட கூறுகிறார்.
கிருஷ்ணர் வேடன்
கிருஷ்ணர் வேடன்WebTeam

”இந்த போரை தடுத்து நிறுத்தி இருக்கலாமே கிருஷ்ணா?” - காந்தாரியின் சாபம்!

மகாபாரத போர் முடிந்தவுடன், போர்களத்தில் இறந்தவர்களின் உடல்கள் ஏராளமாக கிடந்தது. சிலர் குற்றுயிரும், குலையுயிருமாக இருந்தனர். போர்களத்தில் ஓடிய இரத்த ஆறுகளுக்கிடையே அழுகுரலுக் கூக்குரலும் கேட்டுக்கொண்டே இருந்தது. பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கும் இந்த துக்க சம்பவத்தால் அவர்கள் அடைந்த வெற்றியும் ருசிக்கவில்லை.

அஸ்தினாபுரத்தில் காந்தாரியும் தனது 100 பிள்ளைகளும் இறந்த சோகத்தில் அழுதுக்கொண்டிருந்தாள். அவளுக்கு கிருஷ்ணன் மேல் அதீத கோபம் இருந்தது. 'கிருஷ்ணர் நினைத்திருந்தால், இந்த போரை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக எனது ஆசை மகன் துரியோதனை பீமனைக்கொண்டு வதைத்தும் விட்டார்' என்று அவளது மனம் மிகுந்த வேதனையடைந்தது. புத்திர சோகம் அவளை வாட்டியது. அச்சமயத்தில் கிருஷ்ணன் காந்தாரியைப் பார்க்க அவளின் அரண்மனைக்கு வந்தார்.

”உன் குலமும் ஒருவரில்லாமல் அழிந்துபோகும்!”

காந்தாரி, கிருஷ்ணனைக் கண்டதும், அவரின் மேல் உள்ள கோபத்தில் கிருஷ்ணனை சபித்தாள். ”நீ தான் என் குலம் அழிந்ததற்கு காரணம். ஆகவே, என் குல வம்சத்தையே நாசமாக்கிய உன் குலமும் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டு அழிந்து விடுவார்கள். என் நகரை நிர்மூலமாக்கி அழித்தது போல் உன் நாடும் அழிந்து விடும்” என்று சாபமிட்டாள்.

காந்தாரி
காந்தாரிWebTeam

`அங்ஙனமே ஆகுக' - ஒரு வார்த்தை பேசாமல் சாபத்தை ஏற்ற கிருஷணர்!

அந்த சாபத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட கிருஷ்ணரும் பதில் ஏதும் கூறாமல் ”ததாஸ்து” என்று கூறிவிட்டு வந்தார். அதாவது ”ததாஸ்து” என்றால் `அங்ஙனமே ஆகுக'  என்று பொருள். சாபத்தின் படியே நடக்கும் என்று கொண்டுவிட்டார்.

சில காலம் வரை துவாரகையில் இருந்த அவர், தான் வந்த வேலை முடிந்தது மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டும் என்று எண்ணினார். வைகுண்டம் செல்ல சரியான காரணம் வேண்டும், மேலும் காந்தாரியின் சாபத்தையும் அனுபவிக்கவேண்டும் அல்லவா? அதற்கான காலத்தையும் நேரத்தையும் ஏற்படுத்த துவங்கினார்.

”உங்களின் ஞானதிருஷ்டியால் இந்த பெண்ணிற்கு எந்த குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்?”

அவரின் எண்ணப்படி, ஒரு நாள் விஸ்வாமித்திரருடன் சப்த ரிஷிகள் துவாரகை வந்த சமயம், யாதவர்களில் சிலர் கிருஷ்ணனின் மகனான சாம்பனுக்கு பெண் வேடமிட்டு, அவனது மடியில் ஒரு இரும்பு உலக்கையை வைத்துக்கட்டினர். சாம்பன் பார்ப்பதற்கு கர்ப்பிணி பெண் தோற்றத்தில் இருந்தான். விளையாட்டாக, சாம்பனை விஸ்வாமித்திரரிடம் கூட்டிச்சென்ற நண்பர்கள் “ரிஷியே, நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவர்கள். உங்களின் ஞானதிருஷ்டியால் இந்த பெண்ணிற்கு எந்த குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்?” என்று கேட்டனர்.

விஸ்வாமித்திரர் சாபம்
விஸ்வாமித்திரர் சாபம்WebTeam

“உன் வயிற்றில் நீ எதை சுமந்து நிற்கிறாயோ அதுவே பிறக்கும்”

இவர்களின் விளையாட்டு விஸ்வாமித்திரருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. விஸ்வாமித்திரர் அவர்களுக்கு சாபத்தைக் கொடுத்தார். “உன் வயிற்றில் நீ எதை சுமந்து நிற்கிறாயோ அதுவே பிறக்கும். அதன்மூலம் உங்கள் ஒட்டு மொத்த யாதவகுலமும் அழியட்டும்” என்று சாபமிட்டார்.

விஸ்வாமித்திரரின் சாபத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கவும், கிருஷ்ணரும், காந்தாரி சாபம் ஒன்று போதாதென்று விஸ்வாமித்திரரின் சாபம் வேறா? என்று நினைத்தவர், அந்த இரும்பு உலக்கையை பொடிப்பொடியாக்கி அதை கடலில் கரைத்து விட கூறுகிறார். அதன்படியே அந்த உலக்கையை தூளாக்கி அதை கடலிலும் கரைத்து விடுகின்றனர். சில நாட்களில் அந்த இரும்பு துகள்கள் அலையினால் அடித்து வரப்பட்டு கரை ஓரத்தில் இரும்பு புற்களாக வளர ஆரம்பிக்கிறது. இதன் நடுவில் யாதவர் குலத்தில் ஒருவருக்குள் ஒருவர் பகைமை பாராட்டத் தொடங்கினர். ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட ஆரம்பித்தனர். இதில் கிருஷ்ணனின் இரண்டாவது மகனான ப்ரத்யூம்னன் கொல்லப்படுகிறான்.

”ஆழிப்பேரலை ஒன்று துவாரகாவை மூழ்கடிக்கிறது”

இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் துவாரகையை விட்டு காட்டுக்குச் செல்கிறார். கிருஷ்ணர் சென்ற பிறகு யாதவர்களுக்குள் சண்டை மூள்கிறது. ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். கையில் கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர். அந்த சமயம் கடற்கரையில் வளர்ந்து உள்ள இரும்பு கோரைப்புற்கள் வலுவாக இருக்கவே.. அதைக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டு இறக்கின்றனர். அப்பொழுது வந்த ஆழிப்பேரலை ஒன்று துவாரகாவை மூழ்கடிக்கிறது. துவாரகா கடலின் அடியில் சென்றது. இதை எல்லாம் மனக்கண்களால் பார்த்தப்படி காட்டில் தனித்து படுத்திருந்தார் கிருஷ்ணர்.

WebTeam

“ஜடா...இது உனது தவறல்ல... எனக்கு விதிக்கப்பட்ட விதி”

ஜடா என்ற வேடன் ஒருவன் கடலிலிருந்து மீன் பிடித்து வந்தான், அந்த மீனை சமைப்பதற்காக வெட்டும் சமயத்தில் அந்த மீனின் வயிற்றில் யாதவர்கள் பொடி செய்து கடலில் போட்ட இரும்பு துண்டு ஒன்று இருந்தது. அதை கண்ட ஜடா, அந்த இரும்புத் துண்டை கூராக்கி, தனது அம்பில் வைத்துக்கட்டி காட்டிற்கு வேட்டையாட புறப்பட்டான். அந்த சமயம் காட்டில் கிருஷ்ணர் ஒரு மரத்தடியில் படுத்திருந்ததை ஜடா கவனிக்கவில்லை, கிருஷ்ணனின் கால் கட்டை விரல் நுனி மட்டும் ஜடாவிற்கு தெரிந்தது. அதை ஒரு புறா என்று நினைத்த ஜடா தனது அம்பைக்கொண்டு தாக்கினான். சரியாக அந்த அம்பு கிருஷ்ணனின் கால் கட்டைவிரலை தாக்கியது.

இது ஒரு காரணம் போதாதா அவர் வைகுண்டத்தை அடைய?... “ஆ...” என்ற குரல் கேட்டு ஓடி வந்த ஜடா, தான் விட்ட அம்பு தைத்தது புறாவை அல்ல... கிருஷ்ணரை என்று எண்ணி மனம் வருந்தினான். அப்பொழுது கிருஷ்ணர், வேடனிடம், “ஜடா...இது உனது தவறல்ல... எனக்கு விதிக்கப்பட்ட விதி.. நான் வைகுண்டம் செல்வதற்கு நீ உதவி புரிந்துள்ளாய்!” என்று அவனுக்கு ஆசி அளித்து வைகுந்தத்தை அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com