'காசி' ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது; வாழ்நாளில் ஒருமுறையாவது போக வேண்டியது ஏன்? - காரணம் இதுதான்!

ஒவ்வொரு சிவபக்தனும் இங்கு வந்து உயிர் துறப்பதை பாக்கியமாக கருதுவர். இங்கு இறக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் சிவனே ப்ரணவமந்திரத்தை உபதேசம் செய்வதால் அவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது என்பது ஐதீகம்.
காசி
காசி web

காசி... இது இந்துக்களின் முக்கிய ஸ்தலம். தனது ஆயுட்காலத்திற்குள் ஒருமுறையாவது காசி சென்று வர வேண்டுமென்று விரும்புவர்.

இந்த காசி தலமானது உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது இதற்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் போன்ற பெயர்கள் உண்டு. இந்நகரத்தின் இருபுறங்களில் வாரணா, ஹசி என்ற கங்கை நதிகள் ஓடுவதால் இதற்கு வாரணாசி என்று பெயர் வந்தது.

ஒவ்வொரு சிவபக்தனும் இங்கு வந்து உயிர் துறப்பதை பாக்கியமாக கருதுவர். இங்கு இறக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் சிவனே ப்ரணவமந்திரத்தை உபதேசம் செய்வதால் அவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது என்பது ஐதீகம்.

புராணாக்கதை

தக்‌ஷனின் மகள் பார்வதி. இவள் சிவபெருமானை மணந்துக்கொள்ள விரும்பினாள். மகளின் விருப்பத்தை நிறைவேற்றினாலும் தக்‌ஷனுக்கு சிவனின் மேல் விரோதம் உண்டு. அதன் காரணங்களை வரும் நாட்களில் பார்க்கலாம்.

தக்‌ஷன் ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார். அதற்கு சிவபெருமானை அழைக்கவில்லை. ஆனால் பார்வதி தேவி தனது அப்பா நடத்தும் யாகத்தில் தான் கலந்துக்கொள்ள விருப்பம் கொண்டு சென்றாள், அங்கு அவளுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அதனால் மனமுடைந்து அவள் யாககுண்டத்தினுள் தனது உயிரை மாய்த்துக்கொண்டாள். அப்பொழுது அவளது உடல் 51 பாகங்களாக பூமியில் விழுகிறது. அதில் ஒன்று தான் காசியில் இருக்கும் மணிகர்ணிகா சக்தி பீடம் . இங்கு சிவபெருமான் பார்வதியின் காதில் ப்ரணவ மந்திரத்தை சொல்லும் சமயம் அவளின் காதுகளிலிருந்த காதணி விழுந்த இடமாகவும், பார்வதி தேவியின் காதணியை தேடிய சிவபெருமானின் காதணியும் அவ்விடத்திலேயே விழுந்து பார்வதி தேவியின் சக்தியும் சிவபெருமானின் சக்தியும் ஒருசேர இணைந்து சிவலிங்கமாக வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சிவலிங்கத்தை எடுத்து காசி தலத்தில் பிரதிஷ்டை செய்து திருமால் வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது. திருமால் சிவனை வழிப்பட்டதால், இவருக்கு விஸ்வநாதர் என்ற பெயர் பெற்றார். இங்கு வந்து கங்கையில் நீராடி லிங்கத்தை பூஜிப்பதால் பாவங்கள் விலகிவிடும் என்றும் புராணங்கள் கூறுகின்றது.

ஏன் நாம் இங்கு வந்து கங்கையில் குளித்து சிவனை தொட்டு வழிபடவேண்டும் ? இதை புராணக்கதையின் வாயிலாகத் தெரிந்துக்கொள்வோம்.

சத்யபுரம் என்ற ஊரில் பூரித்தும்னன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். இவன் ஆயிரக்கணக்கான மனைவிகளுடன் இன்ப வாழ்க்கையை மேற்கொண்டதால் அவனால் சரிவர நாட்டை கவனிக்க இயலவில்லை. அவன் அண்டை மன்னனால் நாடுகடத்தப்பட்டான். அப்பொழுது தனக்கு உதவியாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு மலையில் வாழ்ந்து வந்தான். அம்மலையில் இவர்கள் உயிர் வாழ்வதற்கான மரம் செடி கொடிகள் ஏதும் இல்லாத காரணாத்தால், அரசன் தனது பசியைப்போக்கிக்கொள்ள தனது மனைவியை கொன்று அவளை உண்டான். அப்பொழுதும் அவன் பசியானது அடங்கவில்லை மலையில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்று தேடி செல்கையில் எதிரே வந்த முனிவர்களை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை உட்கொண்ட சமயம் முனிவர்களின் மாமிசம், அவர்களின் வேத ஏடுகள், இவற்றால் அவனது புத்தியானது தெளிந்தது.

தனது மனைவி , முனிவர்களை கொன்றதால் பிரம்மஹஸ்தி தோஷம் கிட்டியதை உணர்ந்து வருத்தமடைந்தான். அப்பொழுது அங்கு வந்த சாகல்யா என்ற முனிவரிடம் தான் செய்ததற்கான பாவத்திற்கு விமோசனம் என்ன என்பதை கேட்டான். முனிவரும் அவரிடத்தில் ஐந்து கருப்புத்துணிகளைக்கொடுத்து அவனை உடுத்திக்கொள்ள செய்து “காசிக்குச் சென்று விஸ்வநாதரை தரிசித்தால் அவன் செய்த பாவமானது கரையும்” என்று கூறினார்.

முனிவர் கூறியது போல் அவன் காசிக்கு சென்றான். அப்பொழுது அவன் உடுத்தியிருந்த கருப்பு துணியில் ஒரு துணியானது வெண்மையானது. அடுத்து கங்கையில் மூழ்கினான். அப்பொழுது அவனது இன்னொரு கருப்பு துணியானது வெண்மையானது. அத்துடன் அவனால் கொலைசெய்யப்பட்ட அவனது மனைவியும் அங்கு வந்தாள். கணவன் மனைவி இருவருமாக அங்கிருந்த மணிகர்ணிகாவில் மூழ்கி எழுந்த சமயம், அங்கு இவனால் கொலைசெய்யப்பட்ட முனிவர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அவனது இன்னொரு கருப்பு துணியானது வெண்மையடைந்தது. கணவன் மனைவியுமாக அங்கு நின்றுக்கொண்டிருந்த முனிவர்களின் ஆசியைப்பெற்றனர். அவனின் மற்றொரு கருப்புத்துணியும் வெண்மையானது. கடைசியாக விஸ்வநாதரை தரிசித்து தனது கையால் அவருக்கு அபிஷேகம் ஆராதனை செய்த சமயம் அவரின் ஐந்தாவது துணியும் வெண்மையானது.

அதனால் தான் காசி சென்று விஸ்வநாதரை தொட்டு வழிபடவேண்டும் என்று கூறுகின்றனர். காசியைப்பற்றி பல புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தேவர்கள் முனிவர்கள் என்று பலர் சிவபெருமானை நோக்கி தவம் இருந்துள்ளனர்.

சூரியனின் புத்திரர்களான எமனும், சனியும் இத்தலத்தில் தவமிருந்து, யமன் தென் திசைக்கு காவலனாகவும், சனி நவக்கோள்களில் ஒன்றாக பதவிகள் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சப்தரிஷிகள் இங்கு வந்து சிவபெருமானை தவமிருந்து வணங்கியதால் சப்தரிஷி மண்டலமாக பதவியடைந்தனர் என்றும் புராணங்கள் கூறுகிறது. ஆகையால் இன்றும் காசி ஸ்சேத்திரத்தில் இரவு சப்த ரிஷி பூஜை நடைப்பெற்று வருகிறது.

ஹரி சந்திர மகாராஜா விசுவாமித்திரரின் சாபத்தைப்பெற்று காசிக்கு வந்து சுடலை காத்ததாகவும், ஒரு கதைஉண்டு. இராமாயணத்தில் ராமரும், மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் தங்களது பிரம்மஹஸ்தி தோஷம் போக காசி விஸ்வநாதரை வழிபாடு செய்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.

இங்கு கங்கைக்கு உத்தர வாகினி என்ற பெயருண்டு. கங்கை நதியின் ஓரத்தில் 64 தீர்த்த கட்டங்கள் உள்ளது. இதில் உள்ள அனைத்திலும் நீராடவேண்டும் என்பது ஐதீகம் என்றாலும் எல்லோராலும் இது இயலாது. ஆகவே இதில் முக்கியமாக உள்ள அஸ்சங்கம், த்சாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் நீராடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com