“தஞ்சமென்று வந்தது விரோதியானாலும் உயிரை கொடுத்து காப்பாற்ற வேண்டும்” சுக்ரீவனுக்கு ராமர் சொன்ன கதை!

ஒரு மனிதன், ஒரு குரங்கு, ஒரு புலி - இம்மூவரையும் வைத்து ராமாயணத்தில் ராமர் சுக்ரீவனுக்கு ஒரு நீதிக்கதை சொன்னார். அது என்ன என்பதை நாமும் தெரிந்துக்கொள்ளுவோம்.
ராமர், சுக்ரீவன்
ராமர், சுக்ரீவன்File image

ராமாயணத்தில் விபீஷணன், ராவணனின் செயல் பிடிக்காமல், ராமரிடத்தில் அடைக்கலம் கேட்ட சமயம். சுக்ரீவன் ராமரிடத்தில், “ராமா... இவன் நமது எதிரியின் தமயன். இவனை நம்பாதே...” என்று கூறினார்.

அதைக் கேட்ட ராமர், ”சுக்ரீவா, விரோதியே ஆனாலும், நம்மிடம் தஞ்சம் என்று வந்துவிட்டால் நம் உயிரை துறந்தாவது அவனை காப்பாற்றவேண்டும். இது தான் தர்மம். தர்மம் பற்றி நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று, சுக்ரீவனுக்கு ஒரு கதையை கூறினார்.

“ஒரு சமயம் காட்டிற்குள் வழி தவறி சென்ற மனிதன் ஒருவனை புலி ஒன்று துரத்தியது. அவன் உயிருக்கு பயந்து ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அந்த மரத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதை பார்த்த அந்த மனிதன், ‘புலியை கூட நம்பிவிடலாம். குரங்கை நம்பக்கூடாது, அது ஒரு சமயம் போல் ஒரு சமயம் இருக்காது. நம்மை பிடித்து புலியிடம் தள்ளிவிட்டால் என்ன செய்வது’ என்று பயந்து கொண்டிருந்த சமயம், குரங்கு அவனைப்பார்த்து, ‘பயப்படாதே... நீ என் இருப்பிடம் வந்து விட்டாய், ஆகையால் உன்னைக் காப்பாற்றுவது எனது பொறுப்பு’ என்று கூறியதாம்.

மனிதனும் குரங்கும் மரத்தின் மேல் இருக்க, புலி மனிதனுக்காக கீழே காத்து இருந்தது. இரவு வந்தது. குரங்கு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது. மனிதன் குரங்கின் மேல் நம்பிக்கையின்றி முழித்துக்கொண்டிருந்தான்.

அச்சமயம், புலி மனிதனை பார்த்து, ‘ஏய் மனிதனே... எனக்கு தேவை மாமிசம் தான். அது உன் மாமிசமாக இருந்தால் என்ன? குரங்கு மாமிசமாக இருந்தால் என்ன? நீ குரங்கை நம்பாதே... அது உன்னை எப்பொழுது வேண்டுமென்றாலும் மரத்திலிருந்து உன்னை தள்ளிவிடும். ஆகவே... நீ குரங்கை கீழே தள்ளிவிட்டு நீ உயிர் பிழைத்துக்கொள்’ என்று கூறியது.

இதை கேட்ட மனிதனும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, குரங்கை கீழே தள்ளிவிட்டான், குரங்கு தடுமாறி கீழே விழுந்து புலியிடம் அகப்பட்டுக்கொண்டது. புலியும் குரங்கிடம், ‘பார்த்தாயா.. இது தான் மனிதனின் குணம், நீ போய் அவனை நம்பினாயே...! உன்னையே கொல்ல துணிந்தான் பார் ’ என்றது. உடனே குரங்கும், ‘ஆமாம் இப்பொழுது நான் தெளிவாகப் புரிந்துக்கொண்டேன். ஆகவே, நீ என்னை விடுவித்தாய் என்றால் நான் மேலே சென்று அவனை தள்ளிவிடுகிறேன்’ என்றது.

புலியும் குரங்கை விடுவித்தது. மனிதன் நடுங்க ஆரம்பித்தான். குரங்கு வந்து நம்மை புலியிடம் தள்ளிவிடும் என்று நினைத்த சமயம், மறுபடியும் குரங்கு மனிதனிடம், ‘மனிதா, கவலைப்படாதே... நீ தவறே செய்திருந்தாலும் உன்னை காப்பாற்றும் பொறுப்பு என்னது. ஆகவே தைரியமாக இரு” என்றதாம். அத்தகைய குரங்கின் வம்சத்தில் வந்த நீ தஞ்சம் என்று வந்தவனை எதிர்க்க நினைக்கிறாயே... நீ உனது சகோதரன் வாலியினிடத்தில் ‘அண்ணா என்னை மன்னித்து அடைக்கலம் கொடு’ என்று காலில் விழுந்து கேட்டாய். ஆனால் வாலி உன்னை மன்னிக்காமல் துரத்தி அனுப்பினான். தஞ்சம் என்று வந்தவர்களை துரத்தி விடுவது துரோகம்.

அத்தகைய துரோகத்தை வாலி செய்ததால்தான் அவனை நான் தண்டித்தேன்” என்று ராமர் சுக்ரீவனுக்கு கூறியதாக வேளுக்குடி கிருஷ்ணன் ஒரு உபன்யாசத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com