மீனாட்சி திருக்கல்யாணத்துக்குப்பின் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயரும் உண்டு.
meenakshi kalyaanam
meenakshi kalyaanamAMST

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி வரும்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள் மதுரைவாசிகள். சித்திரை திருவிழா நடக்கும் அந்த பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். அந்நேரத்தில் மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்போரும்கூட குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் இங்கிருக்கும் பெருமாள் (கள்ளழகர்).

AMST

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று நம் மதுரை அழகர் கோயில்; இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

சரி, அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே.. ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

AMST

இந்நிகழ்வுக்காக கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கு நூபுர கங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.

சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

AMST

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது.

அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

காவல் ஜமீன்!

அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

- B. முருகன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com