“அப்பனே மாறா... உன்னைப்பற்றி கேள்விப்பட்டு வந்தேன்”- மாறனார் நாயன்மாரின் தொண்டுகளை சோதித்த ஈசன்!

63 நாயன்மார்களில் நாம் இன்று அறியப்போவது, இளையான்குடி மாறனார் நாயனாரைப்பற்றி.!
மாறனார் நாயன்மார்
மாறனார் நாயன்மார்Facebook

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாறனார். சிவபக்தரான இவர், மாகேஸ்வர பூஜையை (சிவனடியார்களின் திருவடியை வணங்கி உணவளிப்பது) தவறாது செய்பவர். இவர் தனது விவசாயத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிவனடியாருக்கு அமுது படைப்பதை அரும்பெரும் தொண்டாக செய்து வந்தவர்.

மாறனார் நாயன்மார்
மாறனார் நாயன்மார்

இவரது பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா...?

சிவபெருமான தனது விளையாட்டை ஆரம்பித்து விட்டார்!

மாறனார் தனது சிவத்தொண்டாக தினம் தினம் சிவனடியாருக்கு அமுது அளித்து அளித்து... அவரது செல்வமானது சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. ஒரு சமயத்தில் இரவல் பெற்று அமுதை படைத்து வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் அடை மழை பெய்துக்கொண்டிருந்த சமயம் மாறனாரின் வீட்டின் கதவானது தட்டப்படும் ஓசை கேட்டது.

மாறனார் எழுந்து வந்து கதவை திறந்தார். சிவனடியார் ஒருவர் தொப்பலாக மழையில் நனைந்தபடி நின்றிருப்பதைப் பார்த்ததும் மாறனார் அவரை வரவேற்று உபசரித்தார்.

மாறனார் நாயன்மார்
மாறனார் நாயன்மார்
“அப்பனே... மாறா... உன்னைப்பற்றி கேள்விப்பட்டு வந்தேன். பெரும் மழையால் என்னால் உணவு சேகரிக்க முடியவில்லை” என்று சிவனடியார் சொன்னது தான் தாமதம்... மாறனாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது, ஒரு அடியார் பசியில் இருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

“இதோ சில மணிகளில் உங்களுக்கான உணவு தயாராகிவிடும். அது வரை சற்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்“ என்ற மாறனார், தனது துணைவியாரிடம் விவரத்தைக் கூறினார்.

“என் செய்வேன் ஐயனே... வீட்டில் ஒரு பிடி அளவு கூட அரிசி இல்லையே....” என்று வருத்தம் கொண்ட அவள், சட்டென்று மாறனாரிடம் , “ஐயனே கவலை வேண்டாம். ஒரு உபாயம் உள்ளது. இன்று வயலில் விதை நெல் தூவினோமே.... அவற்றை எடுத்து வாருங்கள்! அமுது படைக்கலாம்” என்றாள்.

இதைக்கேட்டதும் மாறனார் முகத்தில் மகிழ்ச்சி அரும்பியது. மழையை பொருட்படுத்தாது உடனடியாக வயலுக்கு சென்று நெல்மணிகளை சேகரித்து, கூடவே தனது வயலில் விளைந்திருந்த கீரையையும் பறித்து எடுத்து வந்திருந்தார்.

மாறனார் நாயன்மார்
மாறனார் நாயன்மார்

”ஐயனே... அடுப்பெரிக்க விறகு இல்லை... மழை வேறு பெய்து வருவதால் விறகிற்கு என்ன செய்யலாம்?”

மாறனார் சிறிதும் யோசிக்காமல் தனது வீட்டை தாங்கி இருந்த மரத்தூண்களில் ஒன்றை அகற்றி அதை விறகாக்கி அதை மனைவியிடம் தந்தார்.

மாறனாரின் மனைவி அவ்விறகினைக்கொண்டு அடுப்பெரித்து, அந்நெல்மணிகளை வறுத்து அதனை உரலில் இட்டு குத்தி அரிசியாக்கி கீரையைக்கொண்டு அமுது செய்தாள்.

“என்னவரே... அமுது தயாராகிவிட்டது. அடியாரை உணவு உண்பதற்கு அழையுங்கள் “ என்றாள்.

மாறனாரும் அடியாரின் இருப்பிடத்திற்கு சென்று பார்த்தார். ஆனால் அவரை அங்கு காணவில்லை. இருவரும் பதைபதைத்தனர். உணவு எடுத்து வருவதற்கு தாமதமானதால் அவர் உண்ணாமல் சென்று விட்டாரோ என்று ஐயம் கொண்டு இருவரும் அவரை தேடினர்.

அச்சமயம், “மாறனாரே...” என்று ஒரு அசரீரி கேட்கவும், தம்பதியர் இருவரும் அசரீரி வந்த இடம் சென்று பார்த்தனர். அங்கு ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் சிவபெருமான் இருவருக்கும் காட்சி அளித்தார்.
மாறனார் நாயன்மார்
மாறனார் நாயன்மார்

“மாறனாரே... உனது பக்தியை கண்டு மெச்சினேன். அடியார்களைப் போற்றியும், அவர்கள் பசி போக்கியும் தொண்டு செய்த உமக்கு, எம் பாதத்தில் இளைப்பாற இடம் கொடுக்கிறேன். இங்கு அடியார்களோடு கூடி மகிழ்ந்து இன்புற்று இருப்பீர்கள் நீங்கள்! இனி வேதனையே இருக்காது உமக்கு. இனி நீங்கள் இவ்வுலக வாழ்க்கையில் உழன்று துன்பப்பட வேண்டாம். எம் இருப்பிடம் வாருங்கள்” என்று கூறியதும், மாறநாயனாரும் அவரது மனைவியும் சிவலோகம் சென்று பேரானந்தத்தில் திளைத்தனர்.

நம்மிடம் இருப்பதைவைத்து தொண்டாற்றுகையில், இறைவன் நமக்கும் குறைவின்றி அளிப்பான் என்பதை உணர்த்துவதே மாறனார் நாயன்மாரின் புராணம் சொல்லும் நீதி.

சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வரலாற்றை அறிய: பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com