"கூட்டத்தை விட்டு வெளியே போங்க" அலுவலக்தில் கர்ஜித்த ஆட்சியர்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
தேனி மாவட்டம் காடுகள், மலைகள் நிறைந்த பகுதி என்பதால் அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டு வருகின்றன. அங்குள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் வனத்துறை சம்பந்தமாக பல்வேறு புகார்களை ஆட்சியரிடம் அடிக்கியுள்ளனர். இதனை ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டிருந்த ஆட்சியர், திடீரென வனத்துறை அதிகாரிகளை நோக்கி விளக்கம் அளிக்குமாறு கூறினார்.
இது குறித்து விளக்கம் அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வனத்துறை சார்பில் ஒரு வனவர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்..
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வனவரை நோக்கி சரமாரி கேள்வி கேட்டார்.. "உங்கள் துறை சார்பில் யாரும் வரவில்லையா.. மாதத்திற்கு ஒருமுறை தான் கூட்டம் நடக்கிறது. அதில் கூட பங்கேற்க முடியாதா..என ஆவேசமாக பேசிய ஆட்சியர் அங்கிருந்த வனவரை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். வனவரும் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு எற்பட்டது.