திருப்பு முனையாக அமைந்த காஷ்மீர் பயணம்.. 32 வயதிலேயே கைலாயம் அடைந்த சங்கரர்!

சங்கரரோ.. “கவலைப்படாதே பத்மபாதா.. நீ எழுதி என்னிடம் வாசித்த நூல் என் நினைவில் உள்ளது. ஆகவே.. அதை நான் சொல்ல சொல்ல நீ மறுபடியும் எழுதிக்கொள் என்றார். அது தான் பஞ்சபாதிகை என்ற நூல்.
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்PT

இதுவரை..

ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறில் இதுவரை அவர் துறவரம் மேற்கொண்ட பிறகு பத்மபாதரின் கதை, வியாசருடன் நடந்த உரையாடல் குமாரிலப்பட்டரின் , கதை, கபாலிகன் கதை, சாரதா தேவிக்கு ஆலயம் உருவான கதை , தோடகாஷ்டகம் உருவான கதை ஆகியவற்றைப் பார்த்தோம்.

இப்பொழுது,

ஒரு நாள் சங்கரர் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சமயம், தன் தாய்க்கான இறுதி நாள் நெருங்கி விட்டதை உணர்ந்தார். உடனடியாக தாயை பார்க்க காலடி வந்தார். தனது மகனை பார்த்ததும் ஆர்யாம்பாள் மிகுந்த மகிழ்சியடைந்தாள்.

“அம்மா... உங்களுக்கான இறுதிகாலம் நெருங்கிவிட்டது. உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்” என்றார் சங்கரர்.

“மறுபிறவி எடுக்கா வைகுண்ட ப்ராப்தம் வேண்டும் மகனே” என்றாள்.

சங்கரர் மகாவிஷ்ணுவை பிராத்தனை செய்த சமயம், விஷ்ணு தூதர்கள் தோன்றி அர்யாம்பாளை வைகுண்டம் அழைத்துச்சென்றனர்.

சங்கரர் தனது தாய்குண்டான சடங்குகளை குறைவின்றி நல்லமுறையில் செய்து மீண்டும் தனது இருப்பிடம் திரும்பினார்.

ஒருமுறை பத்மபாதர் தீர்த்தயாத்திரை சென்ற சமயம், ஸ்ரீரங்கம் வந்து தனது தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்தார். பத்மபாதரின் தாய்மாமன் வேற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தார். ஆகையால் அந்த மதத்தை கண்டித்து சங்கரர் எழுதிய நூலுக்கு பத்மபாதர் அழகான உரை ஒன்றை எழுதினார். இவர்களின் இச்செயல் பத்மபாதரின் தாய்மாமனுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இருவரையும் பழிவாங்குவதற்காக தக்கதருணத்திற்காக காத்திருந்தார் அவர்.

அத்தருணமும் வந்தது. பத்மபாதர் தனது நூல்களை தனது தாய்மாமனிடம் பத்திரமாக பாதுகாக்கும் படி கூறி விட்டு அவர் தீர்த்தயாத்திரை கிளம்பினார். இது தான் தக்க சமயம் என்று எண்ணிய பத்மபாதர், அந்நூல்களை தீயிட்டு கொளுத்தி விட்டார்.

தீர்த்தயாத்திரை சென்று திரும்பிய பத்மபாதருக்கு இச்செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது. மீண்டும் தனது நூல்களை எழுத முற்பட்ட சமயம் அவருக்கு தான் எழுதியது எதுவும் நினைவில் இருக்கவில்லை. தனது குருவான சங்கரரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.

சங்கரரோ.. “கவலைப்படாதே பத்மபாதா.. நீ எழுதி என்னிடம் வாசித்த நூல் என் நினைவில் உள்ளது. ஆகவே.. அதை நான் சொல்ல சொல்ல நீ மறுபடியும் எழுதிக்கொள் என்றார். அது தான் பஞ்சபாதிகை என்ற நூல்.

ஒருசமயம் தனது சீடர்களுடன் யாத்திரை செல்ல முடிவெடுத்த சங்கரர், காஞ்சிபுரம் வந்தார். அங்கு வீற்றிருந்த காமாட்சி அம்மன் மிகவும் உக்கிரவடிவாக காட்சி அளித்தாள். இதற்கு அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளை பின்பற்றி வந்ததே காரணம் என்பதை அறிந்த சங்கரர், தாந்திரீக பூஜையை, வைதீக பூஜை யாக மாற்றி ஸ்ரீசக்கரம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தை தணித்தார்.

பிறகு பல்வேறு தலத்திற்கு சென்றவர், துவாரகா சென்று, பிறகு உஜ்ஜைனி சென்றார். அங்கு சங்கரருக்கு பகந்தரம் என்ற நோய் தாக்கியது. ஆனால், பத்மபாதர் தனது சக்தியின் மூலம் சங்கரரை பூர்ண குணமடையச்செய்தார்.

பிறகு உஜ்ஜைனி வழியாக இமயமலை வந்தடைந்தார். அங்கு தனது குருவான கௌடபாதரை தரிசித்து ஆசிபெற்றார். சிலகாலம் தனது சீடர்களுடன் அங்கேயே தங்கினார்.

காஷ்மீரில் அன்னை சாரதாதேவியின் ஆலயத்தில் சர்வக்ஞபீடம் இருக்கிறது. அப்பீடத்தில் அனைத்தும் அறிந்த ஞானி மட்டுமே அமர முடியும். அந்த ஆலயத்தை சுற்றிலும் நான்கு திசையிலும் நான்கு வாசல்கள் இருக்கும். அதில், சங்கரர் தெற்கு திசையில் இருக்கும் கதவின் வழியாக உள்ளே சென்று சர்வக்ஞபீடத்தில் அமர்ந்தார். அன்று முதல் அவர் ஜகத்குரு என்று போற்றப்பட்டார்.

அதன்பிறகு நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.

இதில் பூரி ஜெகந்தாத்தில் ரிக் வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதற்கு பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார்.

தெற்கே சிருங்கேரியில் யஜூர் வேத ப்ரதானமாக கொண்டு அதற்கு சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.

மேற்கே சாம வேதத்தை ப்ரதானமாகக் கொண்டு ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாகக் கொண்டு துவாரகாவில் ஒரு மடத்தை நிறுவினார்.

வடக்கே அதர்வண வேதத்தை ப்ரதானமாகக் கொண்டு பத்ரியில் ஒரு மடத்தை நிறுவி அதற்கு தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.

சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னகர்ப கணபதி விக்ரகத்தை சுரேச்வரிடம் தந்து அதை தினமும் பூஜித்து வருமாறு அவரிடமும் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். இந்த பூஜையானது இன்றும் சிருங்கேரியில் நடந்து வருகிறது. அங்கு சங்கரர் ஏற்றி வைத்த ஜோதியும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. அவசியம் சிருங்கேரி சென்றால் இவற்றை காணலாம்.

இவ்வாறு சங்கரர் இந்தியாவில் நான்கு மூலைகளிலும் மடங்களை நிறுவியபின்னர் தான் தொடர்ந்து தீர்த்தயாத்திரை சென்றார். பத்ரிநாத்தில் சிலகாலம் தங்கி இருந்தவர், அதன் பின் தேதார் சென்றார். அங்கு இவருடன் இருந்த சீடர்களுக்காக வெந்நீர் ஊற்று ஒன்றை தோன்றச் செய்தார். இன்றும் சங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட வெந்நீர் ஊற்றானது அங்கு உள்ளது.

தான் பூமிக்கு அவதாரம் எடுத்து வந்த நோக்கமானது நிறைவடைந்தவுடன் தனது 32 வயதில் இமயமலையின் உயரத்தில் உள்ள கேதார் நாத் சென்று கைலாயம் அடைந்தார். அங்கு இவர் முக்தி பெற்ற இடத்தில் ஸ்ரீசங்கராச்சாரிய கைவல்யதாமா என்றொரு ஆலயம் உள்ளது,

இத்துடன் சங்கரரின் வாழ்க்கை வரலாரானது முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com