மூகாம்பிகையே சங்கரருக்கு கசாயம் கொடுத்து காய்ச்சலை குணப்படுத்திய அற்புதம்!

சங்கரரின் துன்பத்தைக் கண்ட மூகாம்பிகையே கசாயம் தயாரித்துக்கொடுத்து சங்கரரின் காய்ச்சலை குணப்படுத்தியதாக சரித்திரம் உள்ளது.
ஆதி சங்கரர்
ஆதி சங்கரர்file copy

சிறு வயதிலேயே உபநயனம் செய்யப்பட்டு, குருகுலத்தில் சேர்க்கப்பட்டு அங்கு அனைத்து வேத பாராயணங்கள், அத்வைதங்கள், புராணங்கள், சாஸ்திர சம்பிரதாயங்களை கற்றுத் தேர்ந்த சங்கரர், தனது தாய் ஆர்யாம்பாளுக்கு உதவியாக இருக்க பூர்ணா நதியை தன் வீட்டின் வழியே ஓடவைத்தார். இதை கண்ட ஆர்யாம்பாளும் ஊர் மக்களும் மகிழ்சியடைந்தனர். முதலையின் வாயிலில் பிடிபட்ட சங்கரர், துறவறம் பூண்டார். தனது குருவாக கோவிந்த பகவத் பாதரை ஏற்றுக்கொண்டார். தனது குருவின் மூலம் கற்றுக்கொண்ட அத்வைத சித்தாந்தத்தை உலகெங்கிலும் பரப்பினார்.

பின்னர் குமாரிலப்பட்டர் உயிர்நீத்தல், கபாலிகன் சூழ்ச்சி,. இனி..

கபாலிகனுக்கு தன் தலையை தருவதாக உறுதியளித்த சங்கரர், இதைப்பற்றி தனது சீடர்களுக்கு தெரியாமல் இருக்க தான் மட்டும் தனியாக பைரவர் கோவிலுக்குச் சென்றார். குருவை விட்டு அகலாத பத்மபாதருக்கு இது எப்படியோ தெரியவந்தது. அவர் சங்கரருக்கே தெரியாமல் அவரை பின் தொடர்ந்து வந்து காபாலிடமிருந்து குருவை காப்பாற்றினார்.

இதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்ற சங்கரர், கொல்லூர் மூகாம்பிகை தலத்திற்கு வந்து தனது சீடர்களுடன் அங்கு சிலகாலம் தங்கியிருந்தார். அச்சமயத்தில் சங்கரருக்கு கடுமையான காய்ச்சல். சங்கரரின் துன்பத்தைக் கண்ட மூகாம்பிகையே கசாயம் தயாரித்துக்கொடுத்து அவரின் காய்ச்சலை குணப்படுத்தியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இத்தகைய நிகழ்வினால் இன்றும் மூகாம்பிகை கோவிலில் இரவு நைவேத்தியத்தில் கசாயமும் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.

ஒருசமயம் சங்கரர் ஸ்ரீவாசியில் இருக்கும் போது ஒருவர் தனது மூளை வளர்ச்சி இல்லாத வாய் பேச முடியாத மகனுடன் சங்கரரிடம் வந்தவர், “உங்களின் பெருமையைப்பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். இது என் குழந்தை இவனை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும்” என்றார்.

சிறுவனை உற்றுப்பார்த்த சங்கரர் , “ நீ யார் இப்படி ஜடம் போல் இருக்கிறாயே” என்றார்.

அதுவரை ஊமையாக இருந்த அச்சிறுவன்,”நான் ஜடமில்லை சித்ஸ்வரூபி” என்று பேசத்தொடங்கினான். இது அங்கிருக்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது நாள் வரையில் பேசாதிருந்த குழந்தை சங்கரரின் வார்த்தைக்கு பதில் அளிக்கிறதே என்று அனைவருக்கும் ஆச்சர்யம். சமயம் வரும் பொழுது இது பற்றி குருவிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என்று சீடர்கள் எண்ணியிருந்தார்கள்.

அதன்பிறகு அச்சிறுவனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார் சங்கரர். ஹஸ்தமாலகா என்ற அச்சிறுவன் ஹஸ்தாமலகீயம் என்ற 12 ஸ்லோகங்களை இயற்றினான்.

ஏதும் அறியாத சிறுவன் 12 ஸ்லோகங்களை இயற்றியிருப்பது அனைவருக்கும் மேலும் வியப்பை அளித்தது. இது குறித்து சீடர்கள் சங்கரரிடம் கேட்க.. சங்கரர் அச்சிறுவனை பற்றி கூறத்தொடங்கினார். ஒரு சமயம் முனிவர் ஒருவர் யமுனை நதிக்கரையில் தவம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண்மணி தனது 2 வயது சிறுவனை அவரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு நீராட சென்றாள்.

முனிவர் தவத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர் குழந்தையை கவனிக்க தவறி விட்டார். குழந்தை தண்ணீரில் விழுந்து இறந்து விட்டது. குழந்தை இறந்த வருத்தத்தில் அப்பெண்மணி முனிவரை பார்த்து, “இதற்கு காரணம் நீங்கள் தான். அதனால் எப்படியாவது என் குழந்தையின் உயிரை திருப்பி கொடுங்கள்” என்று கூறவும், முனிவர் தனது யோக சக்தியால் தனது ஆத்மா மூலம் அக்குழந்தையின் உடலுக்குள் புகுந்து அதற்கு உயிர் தந்தார். அச்சிறுவன் தான் ஹஸ்தாம்லகர் என்ற சித்ஸ்வரூபி என்றார்.

சங்கரர் ஒரு சமயம் சிருங்கேரியில் இருக்கும் ரிஷ்யசிருங்கர் ஆஸ்ரமத்திற்கு வரும் வழியில், தவளை ஒன்றுக்கு வெயில் தாக்காமல் இருக்க பாம்பு படம் எடுத்து குடைப்பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சங்கரர், அவ்விடத்தில் ஒரு ஆலயம் அமைத்து சாரதா பரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார். (அது தான் சிருங்கேரி சாரதா பீடம்)

சங்கரர் தனது சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கிய சமயம் பல நூல்களை இயற்றியும், அதற்கு விளக்க உரையும் எழுதினார். சங்கரரின் மேல் பக்திக்கொண்ட கிரி என்ற சிறுவன் அவரிடம் சீடனாய் சேர்ந்தான். அனால் கிரிக்கு பாடங்கள் கிரஹித்துக்கொள்வதில் சற்று மந்தம். இதனால் மற்ற சீடர்கள் கிரியை ஒதுக்கி வந்தனர். இதை அறிந்த சங்கரர், கிரிக்கு விஷேஷ ஆசி வழங்கவும் , கிரி தன் குருவின்மேல் தோடகாஷ்டகம் எழுதினார். அதனால் கிரிக்கு தோடகாச்சாரியார் என்ற பெயரும் பெற்றார்.

(அடுத்த பகுதியில் முடிவடையும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com