ஸ்ரீவில்லிபுத்தூர் | விமரிசையாக நடைபெற்ற ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா!
108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் , ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 20ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆவது நாளில், ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அதிகாலையிலேயே ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதுரை கள்ளழகர் சூடிக்களைந்த வஸ்த்திரத்தை உடுத்தி, ஆண்டாள் ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோபாலா முழக்கம் விண்ணதிர, நான்கு ரத வீதிகள் வழியாக, பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி, தேர் வலம் வந்தது. பக்தர்களின் வருகையையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.