அதிசயங்கள் நிறைந்த விஷ்ணு கோயில்.. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறப்பு.. எங்கு இருக்கிறது தெரியுமா?
மகாவிஷ்ணுவுக்குரிய பன்சி நாராயணன் கோயில், ரக்ஷா பந்தன் நாளில் மட்டும் திறக்கப்படும் மர்மமிக்க தலமாக உத்தரகாண்டில் திகழ்கிறது. அன்றைய தினம் கிராமத்து பெண்கள் முதலில் விஷ்ணுவுக்கு ராக்கி கட்டி, பின்னர் தங்கள் சகோதரர்களுக்கு கட்டும் மரபு உள்ளது. இங்கு வழிபடுபவர்களுக்கு நாரத முனிவரின் தவப்புண்ணியம், நேர்மறை ஆற்றல், குடும்ப ஒற்றுமை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
உத்தரகாண்ட் என்றாலே நம்மில் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவபெருமானுக்குரிய கேதார்நாத் கோயில்தான் , இந்துப் புராணங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில் கார்வால் இமயமலையின் கம்பீரமான பனி மூடிய சிகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. அதேபோல உத்தரகாண்டில் மிகவும் போற்றப்படும் இந்து கோவில்களில் ஒன்றான விஷ்ணு பகவானுக்குரிய பத்ரிநாத் கோவிலும் அமைந்துள்ளது. இது தவிர கங்கை நதியை போற்றும் வகையில் கங்கோத்ரி கோயில், யமுனை நதியை போற்றும் யமுனோத்ரி கோயில் என பலவிதமான அதிசயங்களுக்கும் புனித தலங்களுக்கும் பெயர்போனது உத்ரகாண்ட் மாநிலம்..
ஆனால் நம்மில் அதிகமானோருக்கு தெரியாத மகாவிஷ்ணு வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மர்மங்கள் நிறைந்த ஆன்மீகத் தலம் ஒன்றும் இங்கு இருக்கிறது.. குறிப்பாக இத்தலம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் உலகின் மிக அரிதான கோயில்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பழமையான கோயிலின் பெயர் என்ன? இது உத்ரகாண்டில் எங்குள்ளது? அதன் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
வருடத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் திறக்கப்படும் கோயில்
இந்து மதத்தில் உள்ள மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாக போற்றப்படுகிறார். இவரை பக்தர்கள் நாராயணன், ஹரி, பெருமாள் என பலவிதமான பெயர்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்… கருடனை வாகனமாக கொண்ட மகாவிஷ்ணு திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருப்பதாக ஐதீகம். இத்தகைய சிறப்புகளை கொண்ட மகாவிஷ்ணுவுக்கு பன்சி நாராயணன் கோயில் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி (Chamoli) மாவட்டத்தில், உர்காம் பள்ளத்தாக்கில் (Urgam Valley) அமைந்துள்ளது..
ஆம் நம்மில் பலருக்கும் தெரியாத இந்த கோயிலின் ஸ்பெஷல் என்னனா.. வருடத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும்தான் திறந்திருக்குமாம்.. அதுவும் ஆவணி மாத பௌர்ணமி அன்று வரும் ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) பண்டிகை நாளில் மட்டுமே இந்த கோயிலின் கதவுகள் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறக்கப்படுகின்றன. அப்படி திறக்கப்படும் அன்றைய தினமே கோயில் மூடப்பட்டுவிடுமாம்.. அதாவது அன்றைய தினம் காலை சூரிய உதயத்தின் போது திறக்கப்படும் நடை, அன்றே சூரிய அஸ்தமனத்தின் போது மீண்டும் மூடப்படும். வருடத்தில் மீதமுள்ள 364 நாட்களும் மூடியேதான் இருக்கும்..
புராணக்கதை
மனிதர்கள் வழிபடாத மற்ற 364 நாட்களும், தேவலோக முனிவரான நாரதர் இங்கு வந்து மகாவிஷ்ணுவை நேரடியாக வழிபடுகிறார் என உள்ளூர் மக்கள் நம்புவதாக இக்கோயிலின் புராணக்கதை சொல்லுகிறது.. அத்துடன் மகாபலி சக்கரவர்த்தியைக் காக்க பாதாள லோகம் சென்ற விஷ்ணுவை, லட்சுமி தேவி ரக்ஷா பந்தன் அன்று கையில் காப்பு கட்டி மீட்டு வந்தார் எனவும் அப்படி அவர் மீட்டு வந்த இடம்தான் இந்த பன்சி நாராயணன் கோயில் எனவும் புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன....
விஷ்ணு பகவானுக்கு ராக்கி கட்டும் முறை
ரக்ஷா பந்தன் அன்று காலை, அருகில் உள்ள கிராமத்து பெண்கள் இந்த மலைக்கோயிலுக்குச் சென்று, சுத்தம் செய்து, முதலில் விஷ்ணு பகவானின் சிலைக்குப் பட்டு நூலால் ஆன ராக்கியைக் கட்டுகின்றனர். அதன் பிறகே தங்கள் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கட்டுகின்றனர். அத்துடன் கல்கோத் (Kalgoth) கிராம மக்கள் புதிதாக கடைந்த வெண்ணெயை கொண்டு வந்து விஷ்ணுவுக்குப் படைக்கின்றனர். இதுவே அங்கு வரும் பக்தர்களுக்கு முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் நாரத முனிவர் செய்த தவம் மற்றும் வழிபாட்டின் ஒட்டுமொத்த புண்ணிய பலன்களும், நேர்மறை ஆற்றலும் (Positive Energy) பக்தர்களுக்கு அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு வழிபடும் பெண்களின் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுளும், சகல நன்மைகளும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். இமயமலையின் மிகக் கடினமான, கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரமுள்ள செங்குத்தான மலைப்பாதையில் உடலை வருத்தி, மனதை ஒருமுகப்படுத்தி மேற்கொள்ளும் இந்த மலையேற்ற(Trek) வழிபாடு ஒரு சிறந்த தவம் போன்றதாகும். இந்த ஆன்மீகப் பயணத்தின் மூலம் முற்பிறவி பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
இந்த கோயிலுக்குச் செல்லும் வழியில்தான் புகழ்பெற்ற பஞ்ச கேதார் சிவத்தலங்களில் ஒன்றான கல்பேஷ்வர் மகாதேவ் (Kalpeshwar) கோயிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

