‘தடங்கல்களில் கவனம் செலுத்தினால் என்ன ஆகும்?’ - ஸ்ரீமத் பாகவதத்தில் ஜடபரதர் உணர்த்தும் நீதி!

ஒரு செயலை செய்யும் பொழுது அதில் பல்வேறு தடங்கல்கள் வரலாம். அத்தடங்கல்களில் நாம் கவனம் செலுத்தினால், நாம் செய்யும் வேலையானது பாதிப்படையும். இதை உணர்த்தக்கூடிய ஒரு புராணக் கதையானது ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது. அது என்ன கதை என்பதை பார்க்கலாம்.
ஜடபரதர்
ஜடபரதர்PT

ரிஷப தேவரின் மகன் பரதர். இவர் சிறந்த ஞானி. இவர் தனது கர்மத்தை துறந்து மோட்சத்தை அடையும் பொருட்டு தவத்தை மேற்கொண்டார். அப்போது அவர் மனதில் விருப்பு, வெறுப்பு, ஆசை, நிராசை, இன்பம், துன்பம், பாவ புண்ணியம் என்று எதுவும் இல்லாமல் தெளிவான நீரோடை போல் இருந்தார்.

அவர் நதிக்கரை அருகில் அமர்ந்தபடி தவம் மேற்கொண்டிருந்த சமயம், புலி ஒன்று கர்ப்பம் தரித்திருந்த மானை துரத்தி பாய்ந்துவந்தது. பயத்தில் அந்த மான் தன் குட்டியை தண்ணீருக்குள் ஈன்றது. தண்ணீரில் தத்தளித்த மான் குட்டியைப் பார்த்த பரதருக்கு அதன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

‘இந்த புலி ஒன்றுமறியா அந்த மான் குட்டியை சாப்பிட்டு விடுமோ’ என்ற எண்ணத்தில் அந்த மான் குட்டியை எடுத்து அன்புடன் வளர்க்க ஆரம்பித்தார். அந்த மான் குட்டியானது துள்ளிக்குதித்து ஓடி விளையாடுவதைக் கண்ட பரதர் தன்னையும் அறியாமல் அதன் மேல் அன்பை செலுத்த ஆரம்பித்தார். சிறிது நேரம் மான் குட்டியை காணவில்லை என்றால், பதபதைப்புடன் அதை தேட ஆரம்பித்தார். மான் திரும்பி வரும் வரை அதன் நினைவுடனேயே இருந்ததால் அவரின் தவ வாழ்க்கையை மறந்தார்.

இறுதியில் அவர் மரணிக்கும் தருவாயில் ”மானை விட்டு செல்கிறேனே? அதற்கு யார் துணையிருப்பார்?” என்று மானின் நினைவுடனேயே உயிர் துறந்தார். அதனால் அடுத்த ஜன்மத்தில் அவர் மானாகவே பிறந்தார். மானாக பிறந்த அவர் தான் தவம் செய்த இடத்திற்கு வந்த பொழுது அவரின் பூர்வ ஜென்மம், நினைவானது வந்தது.

மான் மீது வைத்த பற்றால் தன்னுடைய தவ வாழ்க்கை இழந்து விட்டோமே என்ற வருத்தப்பட்ட அவர் அவ்விடத்திலேயே மரணித்தார். பின் அதே ஊரில் ஒரு மானுடனாக பூர்வ ஜென்மங்களின் நினைவுடன் பிறந்ததால், உலகில் பற்றற்று வாழ்ந்து வந்தார். அழுக்கு நிறைந்த உடலோடு அழுக்கேறிய ஆடைகளோடும், மூடனைப்போலவும் பித்தனைப் போலவும் நீண்ட ஜடாமுடியுடன் சுற்றி திரிந்து வந்த இவரை மக்கள் ஜடபரதர் என்று அழைத்தனர்.

நமது பலம் நம்மைவிட நம் எதிரிக்கு நன்றாக தெரியும் என்பதைப்போல, இவர் ஒரு ஆத்ம ஞானி என்பதை அறிந்துக்கொண்ட அரக்கன் ஒருவன், இவரை காளிக்கு பலியிட நினைத்து அழைத்தான். மறுப்பேதும் சொல்லாத ஜடபரதர் அரக்கனுடன் சென்றார். பலியிடும் இடத்தில் காளி அன்னை ஜடபரதரை காத்து அரக்கனை பழி வாங்கினாள்.

இவ்வாறு ஜடபரதர் மனதளவில் ஒரு யோகியாய் இருந்தபடி தனது கால் போன போக்கில் சென்றுக்கொண்டிருக்கையில் அவனை தாண்டி ஒரு பல்லக்கு ஒன்று சென்றது. பல்லக்கு தூக்கிகளில் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, அவனுக்கு பதிலாக ஜடபரதரை பல்லக்கு தூக்க நிர்பந்தித்தனர் சேவகர்கள்.

ஜடபரதரும் மறுப்பு ஏதும் கூறாமல் பல்லக்கு தூக்கினார். ஆனால் இவரால் மற்ற சேவகர் போல வேகமாக நடக்க முடியாததால் பல்லக்கானது நிலை தடுமாறியது. பல்லக்கில் அமர்ந்திருந்த மன்னன், ஜடபரதரை பார்த்து, “உடல் பெருத்த உன்னால் இந்த பல்லக்கை தூக்கி வர கூட முடியவில்லை. அதற்குள் களைத்துவிட்டாய்” என்று கோபமாக கேட்டார்.

NGMPC22 - 168

அதற்கு அவர் ”நீங்கள் மன்னரும் இல்லை, நான் பருத்தவனும் இல்லை. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதனால் களைப்படையவும் இல்லை” என்று கூறிவிட்டார். இதன்பின்னரே பல்லக்கில் இருந்த மன்னனுக்கு இவர் ஞானி என்று தெரிந்தது. உடனடியாக பல்லக்கை விட்டு இறங்கி, ஜடபரதரை வணங்கியவர், “உங்களின் பேச்சுக்கள் என் மனதில் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. அதற்கான விளக்கத்தையும் நீங்கள் தான் தரவேண்டும்” என்று கேட்டுள்ளார். ஜடபரதரும் அதற்கான விளக்கத்தை கொடுத்தார்.

“உடல் பருத்தவன் என்று நீங்கள் கூறினீர்கள். உடல் வேறு, உள்ளிருக்கும் ஆத்மா வேறு. உடலானது குழந்தை, இளமை, முதுமை என்று மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்குள் இருக்கும் ஆத்மா மாறாது. நிலையில்லா இந்த உடலை தான் நான் பருத்தவன் இல்லை என்றேன்”

“அடுத்து நீங்கள் மன்னன் இல்லை என்றேன். உண்மையிலேயே நீங்கள் இந்த நாட்டுக்கு மட்டும் தான் மன்னன். ஆனால் உங்களை விட பெரிய அரசர்கள் உள்ளனர். அவர்களை விட பெரிய அரசர்களும் உள்ளனர். அவர்களுக்கு மேலே இறைவன் என்ற அரசர் ஒருவரும் இருக்கிறார். ஆகவே தான் உங்களை மன்னர் இல்லை என்றேன்.

NGMPC22 - 168

பந்தம், பாசம் உறவு என்ற எண்ணத்தில் நிலையில்லாத இந்த உடலின் மீது பற்று வைத்துக்கொண்டு, ஆசைகளை வளர்த்துக்கொண்டு துன்பப்படுகிறோம். இந்த துன்பத்திலிருந்து விலக ஞானத்தை பெற வேண்டும்” என்று அரசருக்கு அறிவுரை கூறினார். அரசரும் உணர்ந்தார்.

இப்படியாக... ஜடபரதர் தான் அடையவேண்டிய லட்சியத்தை ஒரு மான் மீது வைத்த பற்றினால் பல பிறவிகள் எடுக்கும் நிலைக்கு ஆளானார். அதேபோல், ஒரு செயலை செய்து முடிக்கும் வரையில் கவனசிதறல் இல்லாமல் இருந்தால் அவ்வேலையானது விரைவில் முடிவடையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com