திருப்பாவை, திருவெம்பாவை
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி 8ம் நாள்: திருப்பாவை, திருவெம்பாவை பாடலும் விளக்கமும்

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் எட்டாம் நாளான இன்று..
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.

அதன்படி எட்டாம் நாளான இன்றும் இரு பாடல்கள் மற்றும் அதன் பொருட்களை பார்க்கலாம்...

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை

ஆண்டாள் மற்ற தோழிகளுடன் சேர்ந்து இன்னொறு தோழி வீட்டிற்கு வருகிறார். அங்கு அவர் தூங்கிக்கொண்டு இருப்பதைப்பார்த்த ஆண்டாள், ‘கீழ்வானம் சிவந்து விட்டது நீ என்னும் எழவில்லையா? கண்ணனை நாம் வணங்க காலதாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆகவே பெண்ணே நீ சீக்கிரம் எழுந்து வா நீராட போகலாம்’ என்று அற்புதமான பாசுரத்தை இயற்றி இருக்கிறார்.

பாடல்...

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்...

இதன் பொருளைப்பார்க்கலாம்...

‘கீழ் வானம் வெள்ளென்று’ என்றால், பொழுது விடிந்து விட்டது, பார் கீழ்வானம் சிவந்துவிட்டது ....

‘எருமை சிறுவீடு ’என்றால், என்றால் அதிகாலை வேளையில் எருமை தனது பசியைப்போக்கிக்கொள்ள பனி படர்ந்த புல்லை மேயுமாம்

‘மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்’ என்றால், பனி படர்ந்த புல்லை திண்பதற்காக அனைத்தும் ஒரு இடத்தில் கூடி இருக்கிறது...

‘போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை’ என்றால், எல்லாத்தோழிகளும் நீராட செல்ல தயாரானப்பொழுது, நீ இன்னும் வரவில்லை என்ற செய்தியைக் கூறினேன். ஆகையால் அவர்களும் உன்னை எழுப்ப என்னுடன் வந்துள்ளனர்.

திருப்பாவை ஆண்டாள்
திருப்பாவை ஆண்டாள்

‘கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு...’ என்றால், உன்னை எழுப்ப உன் வாசல் வரை வந்து விட்டோம்; ஆனால் நீ இன்னும் கதவை திறக்காமல் தூங்குகிறாயா குதூகலப்பெண்ணே.. நீ கிருஷ்ணன் என்றால் குதூகலிப்பாயே சீக்கிரம் எழுந்திரு...

‘மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய...’ என்றால், கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனையும் (கண்ணன்) நாம் சென்று வணங்கினால்...

‘தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்...’ என்றால்,

ஆஆ-வில் வரும் முதல், ‘ஆ...’, பெண்களைப் பார்த்து கிருஷ்ணன் மகிழ்ச்சியில் ஆ என்று வியப்புடன் சொல்வது. மற்றொரு ‘ஆ...’, நாம் சென்று இவர்களை காண நினைத்தால், எனக்கு முன்னதாக இவர்கள் என்னை பார்க்க வந்தனரே... என்று அருள்தருவான். ஆகவே பெண்ணே நீ சீக்கிரம் எழுந்திரு...” என்கிறார் ஆண்டாள்.

திருவெம்பாவை

மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 8ம் நாளான இன்று அண்ணாமலையாரை தரிசிக்க தோழிகள் தோழியை எழுப்புகிறார்கள்... எப்படி தெரியுமா?

“கோழி கூவ... எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன. நாதஸ்வரம் ஒலிக்க, வெண் சங்குகள் ஒலிக்கின்றன. நாங்கள் தனக்கு உவமையில்லா பேரொலியை, ஒப்பற்ற பேரருளை இதற்கு மேல் எதுவும் இல்லை என்ற மெய்ப்பொருளை நாங்கள் பாடினோம். உனக்கு அது கேட்கவில்லையா, தோழியே உன் உறக்கம்தான் எப்படிப்பட்டது? நாங்கள் இத்தனை தூரம் எழுப்புகிறோம்.. நீ வாய்திறக்கமாட்டேன் என்கிறாயே... நீ அண்ணாமலையார் மீது கொண்டிருந்த அன்பு இவ்வளவுதானா..” என்று எழுப்புகிறார்.

பாடல்

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

விளக்கம்

இதன் விளக்கம் “தோழியை எழுப்ப வந்த பெண்கள், ‘அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. கோவில்களில் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படும்’ என்கிறார்கள்” என்பதாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com