மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன்...
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி | திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் முக்கியத்துவம் வாய்ந்த நிறைவுப் பகுதி!

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 30 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 10 பாடல்களையும் இனி பார்க்கலாம்.

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை பாடல் 30...

ஒருவழியாய் தோழியரை எழுப்பி, கண்ணனை எழுப்பி அவனது புகழைப்பாடி கோபியர்கள் பாவை நோன்பு இருந்து கண்ணனிடம் தங்களுக்கு என்ன தேவையோ அதை பெற்றுக்கொண்டார்கள். இதை ஆண்டாள் நாச்சியார் பாசுரமாக இயற்றி இருக்கிறார். இதை படித்தவர்களும் கேட்டவர்களும் அனைத்து இன்பத்தையும் பெற்று, அவர்கள் விரும்பிய வரத்தினை அடைவார்கள் என்று கூறியுள்ளது இந்த பாசுரம்.

இத்துடன் மார்கழி மாத திருப்பாவை பாடல்கள் நிறைவடைகிறது

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

திருப்பாவை ஆண்டாள்
திருப்பாவை ஆண்டாள்

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை...அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை,

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி...சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட பெண்கள் பெரும்பாடுபட்டு தரிசித்து,

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன... மார்கழி மாத பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்,

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே...இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்... இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

ஆவுடையார் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருப்பள்ளி எழுச்சி பாடி சிவனை எழுப்புகிறார் மாணிக்கவாசகர்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 10.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்

வனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

இத்துடன் திருப்பள்ளி எழுச்சி பாடல் நிறைவடைகிறது...

இப்பாடலுக்கான விளக்கம்...

திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோவில்) வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com