மார்கழி மாதம் 29ம் நாள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் சிறப்பு
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 29 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 9 பாடல்களையும் இனி பார்க்கலாம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
திருப்பாவை 29ம் பாடல்
இந்த பாசுரத்தில் கோபியர்கள் பாவை நோன்பு விரதம் ஏற்று கண்ணனிடம் தங்களுக்கு என்ன வேண்டுமோ கேட்டதும் மட்டுமல்லாமல், நீ எப்பொழுது அவதாரம் எடுத்தாலும் எங்கள் குலத்திலேயே (ஆயர் குலம்) பிறக்கவேண்டும். நாங்கள் உறவினர்கள் என்ற பெருமையை எங்களுக்கு தரவேண்டும். என்று ஆசைப்படுகிறார்கள். அதை இந்த பாசுரத்தில் அழகாக பாடியுள்ளார் நாச்சியார்.
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பொருள்:
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!...கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!... பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்... என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களை எல்லாம் நீயே அழித்து விடு.
ஆவுடையார் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருப்பள்ளி எழுச்சி பாடி சிவனை எழுப்புகிறார் மாணிக்கவாசகர்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9...
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாதவனும், உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைப்பவனும்,வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! ... ஐய்யனே.. பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.