மார்கழி மாத திருப்பாவை 28 வது பாசுரம் திருபள்ளியெழுச்சி 8வது பாடல் விளக்கம்
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 28 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 8 பாடல்களையும் இனி பார்க்கலாம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
திருப்பள்ளியெழுச்சி-28
“குறையொன்றுமில்லாத கோவிந்தா” என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்றமளிக்கிறது.. வால்மீகி ராமாயணத்தில் ராமரை இந்திரனுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பார். எப்படிப்பட்ட ராமரை போயும் போயும் ஒரு இந்திரனுடன் ஒப்பிடுவதா? என்று கோபிகைக்கு வருத்தமாம். அதே சமயம் கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் கோபம் கொண்டு மழை பெய்யச் செய்தானாம். உடனே கண்ணன் ஒரு விரலால் கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்தவரின் காலில் அந்த இந்திரன் விழுந்தானாம். ஆகவே இந்த பாட்டில் குறைஒன்றும் இல்லாகோவிந்தனே.. என்று ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
பொருள்:
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்....குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள்.
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை... எங்களுக்கு அறிவென்பதே இல்லை.
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! ...ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது.
உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது... உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது.
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
... விரதம் எப்படி இருப்பது என்பதை அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக என்கிறார்கள்
ஆவுடையார் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருப்பள்ளி எழுச்சி பாடி சிவனை எழுப்புகிறார் மாணிக்கவாசகர்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் 8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
நீயே முதலும், நடுவும், முடிவும்... அதாவது அனைத்தும் நீயே... உலகமும் நீயே...அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்?உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். ஆரமுதனே.. வசதியில்லா அடியவர்களின் வீடுகளுக்கும் வந்தருளும் ஐய்யனே... உன் தரிசனத்தை காண வந்துள்ளேன் துயில் எழுவாயாக என்று பதிகம் இயற்றியுள்ளார்.