மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன்...
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி மாத சிறப்பு: கூடாரை வெல்லும் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்களின் சிறப்பு!

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 27 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 7 பாடல்களையும் இனி பார்க்கலாம்.

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை

திருப்பாவையில் இது 27 வது பாசுரம். இது வரை பாவை நோன்பு இருப்பதற்காக தோழிகளை எழுப்பி நீராடி, கண்ணனை தரிசிக்க வந்தால், அவர் எழுந்திருக்கவில்லை.. ஆகையால் நற்பின்னை பிராட்டியையும், கண்ணனையும் எழுப்பிய தோழிகள் “நோன்பிருக்க கண்ணனிடமே சங்கு வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்” என்று கேட்கிறார்கள்.

பிறகு நோன்பு நோற்று, கண்ணனை தரிசித்து, தாங்கள் விரும்பியது கிடைக்க வேண்டிக்கொண்டு, கண்ணனுக்கு பிடித்த நெய், வெல்லம் அரிசி சேர்த்து நெய் ஒழுகும் அக்காராடிசல் செய்து கண்ணனுக்கு நிவைத்தியம் செய்து, தாங்களும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்வதாக வருகிறது இப்பாடல்...

இதில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும், நோன்புநூற்கும் முன்னதாக, கோபியர்கள் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்று கூறி இருப்பார்கள். அதே சமயம் இப்பாசுரத்தில் பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார என்று கூறியிருப்பார்... அதாவது சக்கரைப்பொங்கலை அள்ளினால் முழங்கை வரை நெய் வடியும்படி அக்காரஅடிசல் செய்து இருப்பதைபற்றி கூறி இருக்கிறார் ஆண்டாள்.

திருப்பாவை ஆண்டாள்
திருப்பாவை ஆண்டாள்

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா... என்று இப்பாடல் ஆரம்பிப்பதால் அனைத்து வைணவத்தலங்களிலும், நாளை கூடாரவல்லி என்ற விழா கொண்டாடப்படும். இவ்விழாவில், அக்கார அடிசல் செய்யப்பட்டு பெருமாளுக்கு நிவைத்தியம் செய்யப்படும்.

பாடல்:

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

“கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! ....எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!

உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்... உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.

நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே... அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால்தானே நாடு புகழ்கிறது.

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் ... கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு.

அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.... பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்” என்று கூறியுள்ளார்.

திருப்பள்ளி எழுச்சி

ஆவுடையார் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருப்பள்ளி எழுச்சி பாடி சிவனை எழுப்புகிறார் மாணிக்கவாசகர்.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்

பாடல் 7

அது பழச்சுவையென அமுதென

அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:

“தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. உன்னுடைய வடிவம் என்ன? இவன்தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com