மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் மகத்துவம்
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 25 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 4 பாடல்களையும் இனி பார்க்கலாம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
திருப்பாவை..
இது வரை பாடிய பாசுரத்தில் ஆண்டாள் தூங்கிக்கொண்டிருந்த தோழிகளை அரும்பாடுபட்டு எழுப்பி நீராடிவிட்டு ஆலயத்திற்கு கண்ணனை காண சென்றால், அங்கு கண்ணன் தனது மனைவியுடன் உறக்கத்தில் இருக்கிறான். அவனை தரிசனம் செய்ய நினைத்த ஆண்டாள் கண்ணனை எழுப்புகிறாள். அவன் எழுந்திருக்கவில்லை... நற்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்பச்சொல்கிறாள், ஆனாலும் கண்ணன் எழுந்திருக்கவில்லை.. அப்படி இருக்க... இந்த பாசுரத்தில் கண்ணனை மிரட்டுவதைப்போல, நீ எழுந்து எங்களுக்கு தரிசனம் கொடுத்தால், நாங்கள் உனது செல்வச் சிறப்பையும் பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி பாடுவோம் என்கிறாள்.
அதாவது கண்ணனை எப்படியாவது சீக்கிரம் பார்க்கவேண்டும் என நினைத்த ஆண்டாள் அவன் மேல் கொண்ட உரிமையால் மிரட்டும் தொணியில் பாசுரம் இயற்றி இருகிறாள்.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாடலுக்கான விளக்கம்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர... சிறையில் தேவகிக்கு பிறந்து அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே!
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்... அவ்வாறு நீ மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!... அவன் உன்னை அழிக்கநினைத்தாலும், அவனது வயிற்றில் பயம் என்னும் நெருப்பை விளைவித்த திருமாலே...
உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி... அப்படி பட்ட அருளை பெறவேண்டி நாங்கள் உன்னை காண வந்தோம்.
பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.... நாங்கள் கேட்ட அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம். என்கிறார்கள்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் - 5
ஆவுடையார் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருப்பள்ளி எழுச்சி பாடி சிவனை எழுப்புகிறார் மாணிக்கவாசகர்.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
ஐய்யனே.... ஐம்பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்திலும் நீயே இருக்கிறாய். ஆகையால் நீ எங்கும் போவதோ வருவதோ கிடையாது என்று புலவர்கள் உன்னுடைய பெருமைகளை பாடுகிறார்கள்,ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, இத் திருபெருந்துறையில் எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக. என்று பாடல் இயற்றியுள்ளார்.