மார்கழி 21ம் நாள் | திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்!
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருவெம்பாவையின் 20 பாடல்கள் முடிந்த நிலையில், இன்று மாணிக்கவாசகர் ஆவுடையார் கோவிலில் பாடிய திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்களை இனி பார்க்கலாம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
முதலில் திருப்பாவை மார்கழி 21ம் நாளான இன்று,
நந்தகோபரின் மகனே, வேதங்கள் அனைத்தும் உன்னைப்பற்றி புகழுகிறது. அப்படிபட்ட பெருமை மிகுந்த கண்ணனே... சீக்கிரம் துயில் எழு என்று கண்ணனின் பெருமையைச்சொல்லி தூங்குவது போல் பாசாங்கு செய்யும் அவனை கோபியர்கள் புடை சூழ ஆண்டாள் எழுப்புகிறார்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
நந்தகோபரின் வீட்டில் வளார்க்கப்படும் பசுக்கள் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச்சுரக்குமாம். அத்தகைய பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபரின் மகனான கண்ணனே... நீ உறக்கம் களைந்து எழுந்திரு... வேதங்கள் அனைத்தும் உன் பெருமையை சொல்லுகின்றன. ஆனாலும் வேதங்கள் உன்னை முழுதுமாக அறிந்து இருக்கவில்லை.... ஒளிபோன்றவனே... உன்னை எதிர்த்த அரசர்கள் வலிமையிழந்து உன் காலடியில் விழ காத்து கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை வணங்குவதற்கு காத்து இருக்கிறோம்
என்று அற்புதமாக பாசுரம் வாயிலாக நாம் தெரிந்துக்கொள்ள பாடியிருக்கிறாள்
திருப்பள்ளி எழுச்சி பாடல் - 1 மாணிக்கவாசகர் பாடியது...
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொழுது புலர்ந்து விட்டது. உன்னை வழிப்பட கைகளில் பூக்களுடன் உன் திருவடி காண வந்துள்ளேன். உன் முகத்தில் புன்னகை மாறாமல் எனக்கு அருள் செய்திட வேண்டும் என்று சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களையும், குளிர்ந்த வயல்கள் கொண்டதுமான திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோவில்) இருக்கும் சிவபெருமானை வேண்டி மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.