மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன்...
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி மாதம் 19 வது நாள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரத்தின் பொருள்

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.

அதன்படி மார்கழி 19ம் நாளான இன்று...

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மடியில் தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். ஆனாலும், தூக்கத்திலிருந்து எழ மனமில்லாத கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.

திருப்பாவை ஆண்டாள்
திருப்பாவை ஆண்டாள்

நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம். அதன் பிறகு கண்ணனின் மனைவியாகிய நப்பினையை கெஞ்சுகிறார்கள் தோழிகள். அதை அழகாய் பாசுரமாய் கொடுத்திருக்கிறாள் ஆண்டாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி... குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட பஞ்சு மெத்தையில்,

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்... விரிந்த பூக்களைச் சூடிய நப்பின்னையின் மடியில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவதற்கு வருக.

மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்... மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்ப மனமின்றி இருக்கிறாய்.

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்... காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய் போலிருக்கிறது... இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? என்கின்றனர் தோழிகள்.

அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை 19ம் பாசுரம்.

திருவண்ணமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரையும் உண்ணாமுலையாளையும் எப்படி தரிசிப்பது என்பதை மாணிக்கவாசகர் தனது பதிகத்தில் எழுதியுள்ளார். அதில் 19வது பதிகத்தை இன்று பார்க்கலாம்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பெண்னை திருமணம் செய்து கொடுக்கும் தந்தை, உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று கூறி திருமணம் செய்து கொடுக்கிறார். அதே போல் ஒரு பெண்ணும் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கவேண்டும் என்ற உரிமையும் இருக்கிறது. அதன்படி,

எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன? என்று பெண்கள் தனக்கு வரவேண்டிய கணவன் குறித்து சிவபெருமானிடம் வேண்டுவதாய் மாணிக்கவாசகர் பாசுரம் இயற்றி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com