மார்கழி மாதம்15ம் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் சிறப்பு
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
இந்த மார்கழி மாதத்தில் 15ம் நாளில் திருப்பாவை திருவெம்பாவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
இதில் பதினைந்தாம் நாளான இன்று.. திருப்பாவை பாசுரத்தின்படி,14 நாட்களும் ஆண்டாள் தனது தோழியை விடாமல் எழுப்ப, அவளோ நல்ல உறக்கத்தில் இருக்க, பாவை நோன்பு நூற்பதற்கு நேரம் ஆகின்றபடியால், இறுதியாக தோழியை கடிந்துக்கொள்கிறாள். தோழியும் ஒருவழியாக எழுந்துக்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
இதன் பொருள் என்ன என்பதை பார்க்கலாம்.
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!.... ஏலேய்... என் தோழியே! இளமைக் கிளியே! (கோபத்துடன்) நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்... என்னை கோபத்துடன் அழைக்காதீர்கள், சில்லென்று (குளிர்ச்சியாக) அழையுங்கள்.. இதோ ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்.
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்... உடனே தோழிகள், ”நன்றாக கூறுகிறாய்.. இத்தனை நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று என்கின்றனர்.
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக... “ஓ.. அப்படியா... எனக்குதான் பேசத்தெரியவில்லையா... சரி நீங்களே பேச்சில் திறமைவாய்ந்தவர்கள்தான். ஒத்துக்கொள்கிறேன். என்றாள்
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை... இதைக்கேட்ட தோழிகள்... ”நன்றாக இருக்கிறது... நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வந்து உனக்காக காத்திருக்க வேண்டும். நீ மட்டும் தூங்கிக்கொண்டு இருப்பாய்.. அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?” என்று கடிந்து கொள்கிறார்கள்.
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்.... அந்த தோழியும் பேச்சை விடாதவளாய், என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?” என்கிறாள். அதற்கு தோழிகள் அவளிடம், “நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார்த்துக்கொள். என்கின்றனர்.
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.... சரி சரி சண்டை வேண்டாம்... வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்” என்கிறார்கள்.
அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை...
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 15ம் நாளன்று, நீராடும் சமயம் பக்தர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாய் தன் பதிகத்தின் மூலம் விளக்குகிறார்.
திருவெம்பாவை...
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
சிவனடியார்களான பெண்கள் தாங்கள் குளிக்கும் பொழுதும் , எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.