மார்கழி 13ம் நாள்: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் பெருமை
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் பதிமூன்றாம் நாளான இன்று.. ராமனும் அவனே கிருஷ்ணனும் அவனே... அவன் புகழ் பாடமல் படுத்து உறங்குவதில் அர்த்தம் என்ன? என்று ஆண்டாள் தோழியை எழுப்புகிறார்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை.... பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும்,
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்... பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்வதற்காக அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்... குழந்தைகளும், தோழியர்களும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று.... கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது.
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!.... இறை தேட சென்ற சமயத்தில் பறவைகள் ஒலி எழுப்புகிறது. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே... மார்கழியில் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்.... துங்கிக்கொண்டு இருக்கிறாயா பெண்ணே... நோன்பு நூர்க்கும் இந்த நாளும் நன்னாளே!
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.... தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா
- என்று ஆண்டாள் தன் தோழியை எழுப்புகிறார்
திருவெம்பாவை
அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை...
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 13ம் நாளான இன்று பெண்கள் எழுந்து குளத்தில் நீராடும் பொழுது அவர்களின் ஆபரணங்கள் ஒலிஎழுப்ப, வாயால் நமச்சிவாய நாமத்தை சொல்லிக்கொண்டு நீராடுவதாய் அமைந்துள்ளது இந்த பதிகம். இதில் மாணிக்கவாசகர் அம்பிகையை சியாமளா (கருநீலம்) என்றும் சிவபெருமானை சிவந்தவர் என்றும் வர்ணித்துள்ளார்.
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
இதற்கான பொருள்:
"கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்" என்று தலைவி தம் தோழிகளிடம் சொல்வதாக இது அமைந்துள்ளது.