மார்கழி மாதம் 12ம் நாள்; திருப்பாவை திருவெம்பாவையின் சிறப்பு
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் பனிரெண்டாம் நாளான இன்று.. எருமைகள் பால் சொரிந்து சேறாகி கிடக்கும் தோழியின் வாசலில் நின்று உறங்கும் தோழியை எழுப்புகிறார்கள்.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி...நினைத்து முலைவழியே நின்றுபால் சோர... பசியால் கதறித் திரியும் கன்றுகளின் பசியைத் தணிக்க எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அந்த சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது.
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!... இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி.... கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்... சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய்.
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்... எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்?
திருவெம்பாவை
அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 12ம் நாளான இன்று பெண்கள் எழுந்து குளத்தில் நீராடும் பொழுது அவர்களின் ஆபரணங்கள் ஒலிஎழுப்ப, வாயால் நமச்சிவாய நாமத்தை சொல்லிக்கொண்டு நீராடுவதாய் அமைந்துள்ளது இந்த பதிகம்.
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
தோழியர்களே... இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்க, நாம் கங்கையில் நீராடுவோம் அந்த கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடுபவனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.